

புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று கூறியிருப்பதாவது: மணிப்பூர் மாநிலம் பல ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கிறது.
இப்போது மீண்டும், வெறுப்பு மற்றும் வன்முறைத் தீயில் 20 வீடுகள் சாம்பலாகிவிட்டன. இரண்டு அரசுகள் (மத்திய மற்றும் மாநில அரசுகள்) மற்றும் குடியரசுத் தலைவர் ஆட்சி போன்ற அதிகாரங்கள் இருந்த போதிலும், அங்குள்ள மோதல் தீவிரமடைந்து வருகிறதே தவிர குறைந்தபாடில்லை.
ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது உயிர்களை இழந்துள்ளனர்; எண்ணற்ற குடும்பங்கள் சிதறிப்போயுள்ளன. மணிப்பூர் மக்கள் அனுபவித்து வரும் இந்த தாங்க முடியாத வேதனையை கற்பனை செய்து பார்ப்பது கூட கடினமாக உள்ளது. மதம், சாதி, மொழி, பிராந்தியம் மற்றும் அடையாளத்தின் பெயரால் மக்களைப் பிரித்தாளும் மோடி அரசின் பிரிவினைவாத சித்தாந்தத்தின் விளைவுதான் இது.
இன்று மணிப்பூர் மட்டுமின்றி ஒட்டுமொத்த நாடும் பிரதமரிடமிருந்து எந்தவொரு தீர்க்கமான நடவடிக்கையையும் எதிர்பார்க்கவில்லை; குறைந்தபட்சம் ஆறுதலாக இரண்டு வார்த்தைகள் கூட அவரிடமிருந்து வராதா என்று ஏங்கி, தங்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது. மணிப்பூர் மாநிலம் இதைவிடச் சிறந்த அமைதியான சூழலுக்குத் தகுதியானது. அதற்கு இந்தியாவை ஒன்றிணைப்பது ஒன்றுதான் ஒரே வழி. இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.