

புதுடெல்லி: அயோத்தியில் எழுந்தருளியுள்ள ராமருக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான மியாசாகி மாம்பழம் படையல் இடப்பட்டது.
ஜப்பானின் கியூஷு மாகாணம் மியாசாகி நகரைத் தாயகமாகக் கொண்ட இந்த மாம்பழங்கள், உலகிலேயே மிக விலையுயர்ந்த மாம்பழ வகையாகக் கருதப்படுகின்றன. சர்வதேசச் சந்தையில் இதன் விலை ஒரு கிலோ ரூ.1.5 லட்சம் முதல் ரூ.3.5 வரை லட்சம் வரை விற்பனையாகிறது.
இந்த வகை மாம்பழங்கள் பழுக்கும் போது, வழக்கமான மாம்பழங்களைப் போல மஞ்சள் நிறமாக மாறாமல், அடர் ஊதா அல்லது ரூபி-சிவப்பு நிறத்தைப் பெறுகின்றன. மேலும், ஜப்பான் மக்கள் இதனைப் பாசத்துடன் ‘சூரியனின் முட்டை' (Taiyo-no-Tamago / Egg of the Sun) என்றும் அழைக்கின்றனர்.
இந்த வகை மாம்பழங்கள் திறந்தவெளியில் பயிரிடப்படாமல், வெப்பநிலை மற்றும் சூரிய ஒளி கட்டுப்படுத்தப்பட்ட நவீன கண்ணாடி பசுமைக் குடில்களில் மட்டுமே வளர்க்கப்படுகின்றன. மேலும், ஜப்பானிய வேளாண் அமைப்புகளின் கடுமையான தரக்கட்டுப்பாட்டின்படி, ஒவ்வொரு பழமும் குறைந்தபட்சம் 350 கிராம் எடையும், 15 சதவீதத்துக்கும் அதிகமான சர்க்கரை அளவும் கொண்டிருந்தால் மட்டுமே ‘மியாசாகி' என்ற பெயரில் சந்தைப்படுத்த அனுமதிக்கப்படுகின்றன.
இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள ராமருக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான மியாசாகி மாம்பழம் முதன்முறையாக படைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ராமருக்கு துளசி இலையுடன் இந்த வகை மியாசாகிபழம் படைக்கப்பட்டது. ஒரு மாம்பழத்தின் விலை தற்போது ரூ.1 லட்சமாகும்.
இவை அயோத்தியிலுள்ள பிரத்யேக தோட்டத்தில் விளைந்தவையாகும். ஓம்பிரகாஷ் சிங் என்பவரது தோட்டத்தில் விளைந்த இப்பழம் ராமருக்கு படைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஓம்பிரகாஷ் சிங் கூறும்போது, “இந்த மாம்பழங்கள் மிகவும் விலை உயர்ந்தவையாகும். மற்ற மாம்பழங்களின் சுவையைக் காட்டிலும் இது கூடுதல் சுவை மிக்கது. அதிக நார்ச்சத்தும், வைட்டமின் சத்துகளும் கொண்டது.
அயோத்தியில் உள்ள தட்பவெப்ப நிலைக்கு இந்த வகை மியாசாகி பழங்கள் சிறப்பாக விளைகின்றன. இந்த ஆண்டு 150 கிராம் எடை முதல் 300 கிராம் எடை வரையிலான 12 மியாசாகி மாம்பழங்கள் மரத்தில் விளைந்தன. முதல் மாம்பழத்தை அயோத்தி ராமருக்கு படைத்தேன்’’ என்றார்.
கோயில் அறக்கட்டளை நிர்வாகி மகந்த் சீதாராம் தாஸ் ஜி மகராஜ் கூறும்போது, “இந்த வகை மாம்பழம் கனிகளின் அரசன் என்று அழைக்கப்படுகிறது. ஓம் பிரகாஷ் தோட்டத்தில் விளைந்த மியாசாகி பழங்கள் படைக்கப்பட்டதை இன்று பார்த்தேன். இந்த மாம்பழத்தின் நிறம் பிரபஞ்சத்துக்கு ஒளியூட்டும் சூரிய பகவானின் நிறத்தை ஒத்திருக்கிறது’’ என்றார்.