

பிரான்ஸின் எவியான் நகரில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பங்கேற்றார். அப்போது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை சந்தித்துப் பேசினார்.
எவியான்: பிரான்ஸின் எவியான் நகரில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்போது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்களை அவர் சந்தித்துப் பேசினார்.
ஜி7 அமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த ஆண்டுக்கான ஜி7 உச்சி மாநாடு பிரான்ஸின் எவியான் நகரில் கடந்த 15-ம் தேதி தொடங்கியது. இதில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், ஜெர்மனி பிரதமர் பிரெட்ரிக் மெர்ஸ், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, கனடா பிரதமர் மார்க் கார்னி, ஜப்பான் பிரதமர் சனே டகைச்சி மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லியன், ஐரோப்பியக் கவுன்சில் தலைவர் அந்தோணியோ கோஸ்டா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
பிரதமர் மோடி கடந்த 13-ம் தேதி டெல்லியில் இருந்து பிரான்ஸ் சென்றார். கடந்த 14-ம் தேதி அந்த நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரானைச் சந்தித்துப் பேசினார். அங்கிருந்து ஸ்லோவேக்கியாவுக்குச் சென்ற பிரதமர் மோடி, கடந்த 15-ம் தேதி அந்த நாட்டு பிரதமர் ராபர்ட் ஃபிகோவைச் சந்தித்துப் பேசினார்.
இதைத் தொடர்ந்து ஜி7 மாநாட்டில் பங்கேற்க ஸ்லோவேக்கியா தலைநகர் பிராட்டிஸ்லாவாவில் இருந்து பிரதமர் மோடி நேற்று மீண்டும் பிரான்ஸுக்கு புறப்பட்டார். வரும் வழியில் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் அவர் தரையிறங்கினார். அங்கு அந்த நாட்டு அதிபர் கய் பார்மெலினைச் சந்தித்தார். அப்போது வர்த்தகம், பாதுகாப்பு, ஏஐ தொழில்நுட்பம், ஜி7 உச்சி மாநாடு தொடர்பாக தலைவர்கள் இருவரும் ஆலோசித்தனர்.
பின்னர், ஜெனீவாவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரான்ஸின் எவியான் நகருக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு நேற்று மாலை நடைபெற்ற ஜி7 அமர்வுகளில் அவர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். ஜி7 மாநாட்டின் போது அமெரிக்க அதிபர் ட்ரம்பை, பிரதமர் மோடி நேற்று சந்தித்துப் பேசினார். இரு தலைவர்களும் கைகுலுக்கி கொண்டனர்.
இருவரும் அருகருகே அமர்ந்து 5 நிமிடங்கள் பேசினர். கடந்த 2025-ம் ஆண்டு பிப்ரவரியில் அமெரிக்காவுக்கு சென்ற மோடி, அதிபர் ட்ரம்பை சந்தித்துப் பேசினார். அதன் பிறகு அமெரிக்க அரசின் கூடுதல் வரி விதிப்பால் இரு நாடுகள் இடையிலான உறவில் லேசான விரிசல் ஏற்பட்டது. இந்தச் சூழலில் சுமார் 16 மாதங்களுக்குப் பிறகு அதிபர் ட்ரம்பை அவர் நேற்று மீண்டும் சந்தித்துப் பேசினார்.
மாநாட்டின் இறுதி நாளான இன்று பிரிட்டிஷ், கனடா, இத்தாலி பிரதமர்கள், ஐக்கிய அரபு அமீரக அதிபர் முகமது பின் ஜயாத் அல் நயான் உள்ளிட்டோரை பிரதமர் மோடி தனித்தனியாகச் சந்தித்துப் பேச உள்ளார். குறிப்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்புடனும் பிரதமர் மோடி தனியாகப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் வரி விதிப்பு விவகாரம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.