

கண்ணூர்: கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் சி.வி.தன்ராஜ். கண்ணூரின் எழிமலா பிரிவு செயலராக இருந்தார். இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி பையனூரிலிருந்து ராமன்தளிக்கு சென்று கொண்டிருந்த தன்ராஜை, ஒரு கும்பல் மோட்டார் சைக்கிளில் வந்து வழிமறித்து தாக்கி கொலை செய்தது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த கண்ணூர் போலீஸார், 20 பாஜக-ஆர்எஸ்எஸ் தொண்டர்களை கைது செய்து வழக்கு தொடர்ந்தனர். இதில் 12-வது நபராக குற்றம்சாட்டப்பட்ட சி.பிஜு என்பவர் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து 19 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு கண்ணூரின் தளிபரம்பா கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில் நீதிபதி கே.என்.பிரசாந்த் நேற்று தீர்ப்பு வழங்கினார்.
குற்றம்சாட்டப்பட்ட பாஜக-ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் டி.பி.பிஜு (34), எம்.விபின் (34), எம்.வைசாக் ஆகிய 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 16 பேர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.