

விசாகப்பட்டினம்: ஆந்திராவின், விஜயநகரம் மாவட்டம், ராஜம் பகுதியை சேர்ந்தவர் சி.ரவீந்திரா (35). இவர் விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை தளத்தில் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றுகிறார். இவரது மனைவி விஜயநகரத்தில் உள்ள தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
கரோனா பெருந்தொற்று காலத்தில் கடற்படை வீரர் ரவீந்திராவிற்கு சமூக வலைதளம் மூலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த மவுனிகா (29) என்பவருடன் நட்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்ததனர். ரவீந்திராவிடம் இருந்து மவுனிகா இதுவரை ரூ.3.5 லட்சம் வரை பணம் வாங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. கூடுதலாக பணம் வேண்டும் என்று அவர் தொடர்ந்து வற்புறுத்தி உள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ரவீந்திரா அவரை கொலை செய்ய திட்டமிட்டு உள்ளார். இதன்படி கடந்த ஞாயிற்றுக் கிழமை மாலை மவுனிகாவை தனது வீட்டுக்கு அழைத்துள்ளார். இருவருக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது மவுனிகாவை ரவீந்திரா கத்தியால் குத்தி கொலை செய்தார்.
பின்னர் உடல் பாகங்களை தனித்தனியாக வெட்டி பிரிட்ஜில் பிளாஸ்டிக் பையில் மூட்டை கட்டி வைத்துள்ளார். தலையை மட்டும் வெட்டி ஆளில்லாத பகுதிக்கு கொண்டு சென்று எரித்தார். மவுனிகாவின் செல்போனையும் எரித்தார். வீட்டுக்கு வந்தன் பிறகு அவர் தனது நெருங்கிய நண்பரிடம் அனைத்து விவரங்களையும் கூறியுள்ளார்.
உடனடியாக போலீஸில் சரண் அடையுமாறு அந்த நண்பர் அறிவுறுத்தி உள்ளார். அதன்படி, விசாகப்பட்டினம் போலீஸில் ரவீந்திரா சரண் அடைந்தார். அவரை போலீஸார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.