

இம்பால்: 2023-ஆம் ஆண்டு மே 3-ஆம் தேதி இனக்கலவரம் வெடித்தது முதல் இந்த ஆண்டு மார்ச் 30 வரையிலான காலகட்டத்தில், மணிப்பூரில் மொத்தம் 58,821 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும், 217 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மாநில அரசு தெரிவித்துள்ளது.
மணிப்பூர் காங்கிரஸ் தலைவர் ஹரேஷ்வர் கோஸ்வாமி தாக்கல் செய்த தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுவுக்குப் பதிலளிக்கும் விதமாக, ஏப்ரல் 20 அன்று உள்துறைச் செயலகம் இந்தப் புள்ளிவிவரங்களை வழங்கியது.
மே 2023 முதல் இனக்கலவரம் தொடர்பாக உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை குறித்துப் பதிலளித்த அத்துறை, ‘உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்பட்ட கருணைத் தொகையின் அடிப்படையில் இதுவரை 217 பேர் உயிரிழந்துள்ளனர்’ என்று குறிப்பிட்டது.
மார்ச் 10, 2026 நிலவரப்படி மணிப்பூரில் நிவாரண முகாம்களின் எண்ணிக்கை 174 ஆக இருந்ததாகவும், அதேவேளையில் மணிப்பூர் காவல் துறை வீட்டு வசதி வாரியக் கழகத்தால் 3,000 வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகவும் அது தெரிவித்தது. இனக் கலவரத்தால் மே 3, 2023 முதல் 7,894 நிரந்தர வீடுகள் முழுமையாகவும், 2,646 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளதாகவும் உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த தகவல்கள் வெளியான பின்னர் மணிப்பூர் காங்கிரஸ் தலைவர் ஹரேஷ்வர் கோஸ்வாமி வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் குறித்த தகவல்களைப் பெறுவதற்குத் தனக்கு ஏழு மாத கால முயற்சி தேவைப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பள்ளத்தாக்குப் பகுதியைச் சேர்ந்த மேதி சமூகத்தினருக்கும், மலை மாவட்டங்களில் வசிக்கும் குக்கி சமூகத்தினருக்கும் இடையே மே 2023-இல் வெடித்த இனக்கலவரம் 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது.
தற்போதும் கூட அம்மாநிலத்தில் அங்காங்கே வெடிக்கும் வன்முறையால், அவ்வப்போது பதற்றமான சூழல் உருவாகி வருகிறது என்பது கவனிக்கத்தக்கது.