

தெஹ்ரான்: போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்கா - ஈரானுக்கு இடையிலான பேச்சுவார்த்தைக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில், இன்று ஹார்முஸ் ஜலசந்தியில் இரண்டு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பிரிட்டிஷ் ராணுவம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இடைக்கால போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். போர் நிறுத்த நீட்டிப்பு குறித்த ட்ரம்ப்பின் அறிவிப்புக்கு ஈரான் இன்னும் பதிலளிக்கவில்லை. அதேநேரத்தில், உடன்பாடு எட்டப்படாவிட்டால் மீண்டும் சண்டையைத் தொடங்கத் தயாராக இருப்பதாக இரு நாடுகளும் எச்சரித்துள்ளன.
இந்தச் சூழலில், பிரிட்டிஷ் ராணுவத்தின் கடல்சார் வர்த்தக செயல்பாடுகள் (UKMTO) மையம், ஈரானின் துணை ராணுவப் படையான புரட்சிகர காவலர் படை (IRGC), இன்று காலை 7:55 மணியளவில் ஹார்முஸ் ஜலசந்தியில் ஒரு சரக்கு கப்பலைத் தாக்கி சேதப்படுத்தியதாக தெரிவித்தது.
துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பு ஈரான் ராணுவம், கப்பலுக்கு எச்சரிக்கை விடுக்கவில்லை என்றும் பிரிட்டிஷ் ராணுவம் கூறியது.
அதிர்ஷ்டவசமாக, இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும் இந்தத் தாக்குதலால் எந்தச் சேதமும் ஏற்படவில்லை.
இரண்டாவதாக ஒரு சரக்குக் கப்பல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு கடலில் நிறுத்தப்பட்டதாக பிரிட்டிஷ் ராணுவம் தெரிவித்தது. அந்தக் கப்பலுக்கும் எந்தச் சேதமும் ஏற்படவில்லை என்று அறிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த 19-ல் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஈரானின் தவுஸ்கா சரக்கு கப்பலை அமெரிக்க கடற்படை கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து டிபானி என்று பெயரிடப்பட்ட மற்றொரு ஈரானிய எண்ணெய் கப்பலை அமெரிக்க கடற்படை நேற்று கைப்பற்றியது. இதையடுத்து, ஈரானின் சரக்கு, எண்ணெய் கப்பல்களை கைப்பற்றுவது போர் நிறுத்த மீறல் ஆகும் என்று அந்த நாட்டு தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் அமெரிக்கா இஸ்ரேல் கூட்டுப் படைகள் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. ஈரானும் இஸ்ரேல் மற்றும் வளைகுடா பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது. கடந்த 8-ம் தேதி இருதரப்புக்கு இடையே 2 வாரங்களுக்கு போர் நிறுத்தம் அமல் செய்யப்பட்டது. இதனிடையே கடந்த 11, 12-ம் தேதிகளில் அமெரிக்கா - ஈரான் பிரதிநிதிகள் இடையே பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதைத் தொடர்ந்து இஸ்லாமாபாத்தில் 2-ம் சுற்று பேச்சுவார்த்தையை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அணு ஆயுதம், ஹார்முஸ் ஜலசந்தி கட்டுப்பாடு, லெபனான் போர் நிறுத்தம் உள்ளிட்ட விவகாரங்களில் இரு தரப்புக்கும் இடையே ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. இதனால் 2-ம் சுற்று பேச்சுவார்த்தை தள்ளி வைக்கப்பட்டு வருகிறது கவனிக்கதக்கது.