மம்மூட்டிக்கு பத்ம பூஷண், ரோஹித்துக்கு பத்மஸ்ரீ விருது வழங்கினார் குடியரசுத் தலைவர்

மம்மூட்டிக்கு பத்ம பூஷண், ரோஹித்துக்கு பத்மஸ்ரீ விருது வழங்கினார் குடியரசுத் தலைவர்
Updated on
1 min read

புதுடெல்லி: நடிகர் மம்மூட்டிக்கு பத்ம பூஷண், கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மாவுக்கு பத்மஸ்ரீ உட்பட 66 பேருக்கு பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று வழங்கினார்.

குடியரசு தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் அறிவிக்கப்படும் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்று பத்ம விருதுகள். பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகிய 3 பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. கல்வி, இலக்கியம், அறிவியல், மருத்துவம், விளையாட்டு, சுகாதாரம், தொழில், வர்த்தகம், பொறியியல், பொது விவகாரங்கள், குடிமைப் பணி, சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களை கவுரவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

குடியரசு தினத்துக்கு முந்தைய நாளான 25-ம் தேதி பத்ம விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்டியல் வெளியிடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜனவரியில் வெளியிட்டது. இதில், 5 பேருக்கு பத்ம விபூஷண், 13 பேருக்கு பத்ம பூஷண், 113 பேருக்கு பத்மஸ்ரீ என மொத்தம் 131 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் சுமார் 61 பேருக்கு கடந்த மே மாதம் குடியரசுத் தலை​வர் மாளி​கை​யில் நடைபெற்ற விழாவில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், நடப்பு ஆண்டில் பத்ம விருதுகள் பட்டியலில் இடம்பெற்று மே மாதம் விருதை பெற தவறியவர்களுக்கு இன்று (ஜூன் 23) பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. இதில் மொத்தம் 66 பேர் விருதுகளை பெற்றனர். அவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார். இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பத்ம விபூஷண்: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ், பி.நாராயணன் (இலக்கியம், கல்வி) ஆகியோர் பத்ம விபூஷண் விருதை இன்று பெற்றனர்.

பத்ம பூஷண்: நடிகர் மம்மூட்டி, டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ், எஸ்கேஎம் நிறுவனர் மயிலானந்தன், வெள்ளப்பள்ளி நடேசன், டாக்டர் நோரி தத்தாத்ரேயுடு, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் (மறைவு), பாடகி அல்கா யக்னிக் ஆகியோர் பத்ம பூஷண் விருதை பெற்றனர்.

பத்மஸ்ரீ: கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா (விளையாட்டு), மிருதங்க வித்வான் திருவாரூர் பக்தவத்சலம் (கலை), சென்னை ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி (அறிவியல், பொறியியல்) உள்ளிட்ட 57 பேர் பத்மஸ்ரீ விருதுகளை பெற்றனர்.

மம்மூட்டிக்கு பத்ம பூஷண், ரோஹித்துக்கு பத்மஸ்ரீ விருது வழங்கினார் குடியரசுத் தலைவர்
மெஸ்ஸி, எம்பாப்பே சாதனை கோல்: நாக்-அவுட் சுற்றில் அர்ஜெண்டினா, பிரான்ஸ், நார்வே| FIFA WC - Match Momentum

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in