

மேற்கு மேதினிபூர்: மேற்கு வங்கத்தில் பள்ளிகளைக் கட்டுவதை விடுத்து, மதரசாக்களை கட்டுவதிலேயே முதல்வர் மம்தா பானர்ஜி கவனம் செலுத்தியதாகவும், அதற்காகவே பிரத்யேகமாக ரூ.5,000 கோடி நிதியை ஒதுக்கியதாகவும் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மேற்கு மேதினிபூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசிய பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, “ஊடுருவல்காரர்களிடம் இருந்து மேற்கு வங்கத்தை விடுவிக்க பாஜக விரும்புகிறது. ஆனால், ஊடுருவல்காரர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புகிறார் மம்தா பானர்ஜி.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஆட்சிக்கு வந்ததும், ஒவ்வொரு ஊடுருவல்காரர்களையும் கண்டுபிடித்து மேற்கு வங்கத்தில் இருந்து விரட்டியடிப்போம்.
பாஜக ஆட்சி அமைந்ததும், மேற்கு வங்கத்தில் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும். இங்கு யாரும் நான்கு திருமணங்களை செய்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 நிதி உதவி வழங்கப்படும். இதேபோல், ஒவ்வொரு சகோதரியின் வங்கிக் கணக்கிலும் ரூ.3,000 வரவு வைக்கப்படும். விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.9,000 நிதி உதவி அளிக்கப்படும்.
பாஜக வெற்றி பெற்றால் மேற்கு வங்கம் டெல்லியில் இருந்து ஆளப்படும் என மம்தா பானர்ஜி கூறி வருகிறார். மேற்கு வங்கத்தின் அடுத்த முதல்வர், மேற்கு வங்கத்திலேயே பிறந்து வளர்ந்த ஒரு பாஜக தொண்டராக இருப்பார் என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். மம்தா பானர்ஜிக்கு ஒரே ஒரு குறிக்கோள் மட்டுமே இருக்கிறது. தனது மருமகனை அடுத்த முதல்வராக்க வேண்டும் என்பதே அது.
மேற்கு வங்கம் ரூ.8 லட்சம் கோடி கடனில் சிக்கித் தவிக்கிறது. ஆனால், மம்தா பானர்ஜிக்கு அதுபற்றி எந்த கவலையும் இல்லை. மாநிலத்தில் பள்ளிகளைக் கட்டுவதை விடுத்து மதரசாக்களை கட்டுவதிலேயே அவர் கவனம் செலுத்தி வருகிறார். இதற்காகவே பிரத்யேகமாக ரூ.5,000 கோடி நிதி ஒதுக்கியுள்ளார்” என தெரிவித்தார்.