கோவை: “திமுக மீண்டும் வெற்றி பெற்றால் உதயநிதி ஸ்டாலின்தான் முதல்வராவார்” என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
கோவையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பியூஷ் கோயல், “எங்களைப் பொறுத்தவரை தேசம் முதலில், கட்சி இரண்டாவது, நாங்கள் கடைசி. அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் சென்று பணியாற்ற வேண்டும் என்று கட்சி முடிவெடுத்துள்ளது. அவர் கட்சியின் மதிப்புமிக்க சொத்து, மூத்த தலைவர். அவருக்கு மாநிலம் தழுவிய அளவில் வரவேற்பு இருக்கிறது.
ஒவ்வொரு வேட்பாளரும் தங்கள் தொகுதியில் அவர் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்கள். நாங்கள் அவரை ஒரு தொகுதிக்குள் அடக்க விரும்பவில்லை. நாட்டின் சிறந்த எதிர்காலத்துக்காக கட்சி பாடுபடுகிறது. நாங்கள் அனைவரும் அதை அடையவே பாடுபடுகிறோம்.
திமுக ஆட்சிக்கு எதிராக மாநிலம் முழுவதும் மிகப் பெரிய அதிருப்தி நிலவுகிறது. ஊழல் அளவு எந்த அளவுக்கு அதிகரித்திருக்கிறது என்பதை அறிந்து மக்கள் மிகுந்த வேதனைப்படுகிறார்கள். சட்டம் - ஒழுங்கு நிலைமை மோசமடைந்திருப்பது குறித்தும் மக்கள் மிகுந்த கவலையில் இருக்கிறார்கள். பெண்கள் பாதுகாப்பு குறித்து மக்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர்.
டாஸ்மாக் ஊழல் மிகப் பெரிய அதிருப்தியை மக்களுக்கு ஏற்படுத்தி உள்ளது. மதுபான மாபியா, மணல் மாபியா, நில மாபியாவாக தமிழ்நாடு சுருங்கிவிட்டது. மிகுந்த ஆற்றல் கொண்ட, மிகவும் அழகான இந்த மாநிலம் திறமையற்ற, ஊழல் நிறைந்த, குடும்ப ஆட்சி நடத்தும் ஸ்டாலினால் சீரழிந்துள்ளது.
ஸ்டாலின் முதல்வராக இருக்கிறார். அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக இருக்கிறார். ஸ்டாலினின் மருமகனான சபரீசன் மற்றொரு முக்கிய அதிகார மையமாக இருக்கிறார். ஸ்டாலினின் சகோதரி கனிமொழி எம்பியாக இருக்கிறார். எந்த ஒரு இளைஞரும் இதுபோன்ற குடும்ப அரசியலை விரும்புவார்கள் என்று நான் நினைக்கவில்லை.
உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்கிவிட்டார்கள். எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது. ஒருவேளை தவறுதலாக திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அடுத்த முதல்வராக உதயநிதி ஸ்டாலின் வருவார். உதயநிதியை முதல்வராக மக்கள் ஏற்பார்கள் என்று நான் நினைக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.