

மம்தா பானர்ஜி
கொல்கத்தா: மே.வங்க முன்னாள் முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் நிறுவனருமான மம்தா பானர்ஜியை கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கியுள்ளதாக ரிதப்ரதா பானர்ஜி தலைமையிலான அதிருப்தி குழுவினர் அறிவித்தனர்.
கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் விடுதியில், ரிதப்ரதா பானர்ஜி தலைமையில் திரிணமூல் காங்கிரஸின் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மற்றும் நகராட்சி மாமன்ற உறுப்பினர்களின் (கவுன்சிலர்கள்) அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாலை 4 மணியளவில் நடைபெற்ற இந்தச் சிறப்பு கூட்டத்தில் கொல்கத்தா, பஹரம்பூர், உத்தர்பாரா, ஸ்ரீராம்பூர், டம் டம் உள்ளிட்ட பல்வேறு நகராட்சிகளைச் சேர்ந்த சுமார் 40-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தின் முடிவில், அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் 10 பேர் கொண்ட புதிய தேசிய செயற்குழு ஒருமனதாக உருவாக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இக்கூட்டத்தில் ரிதப்ரதா பானர்ஜி, சந்திபன் சஹா மற்றும் கொல்கத்தாவின் முன்னாள் மேயர் ஃபிர்ஹாத் ஹக்கீம் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, கட்சியின் தலைவர் பதவியிலிருந்து மம்தா நீக்கப்பட்டுள்ளார். புதிய தலைவராக அருப் ராய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இக்குழுவில் உள்ள மற்ற தலைவர்களுக்கும் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.