

டேராடூன்: நிஹாங் என்பவர்கள் சீக்கியர்களில் ஒரு பிரிவினர் ஆவர். இவர்கள், சீக்கிய மதத்தில் ஆயுதம் ஏந்திய போர் வீரர்களாக அழைக்கப்படுகின்றனர்.
நாடு முழுவதும் உள்ள குருத்வாராக்களுக்கு நிஹாங் சீக்கியர்கள் புனிதப் பயணம் மேற்கொள்கின்றனர். கடந்த 16ம் தேதி உத்தராகண்ட் மாநிலம், கர்ணபிரயாக் பகுதியில் 6 நிஹாங் சீக்கியர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது நிஹாங் சீக்கியர்கள் வாள்களை வீசியதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இதுதொடர்பாக 4 நிஹாங் சீக்கியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சூழலில் உத்தராகண்ட் மாநிலம், ருத்ரபிரயாக் மாவட்டம், நாகராசு கிராமத்தில் உள்ள குருத்வாராவில் 7 நிஹாங் சீக்கியர்கள் கடந்த 20ம் தேதி நுழைந்தனர். அவர்கள் குருத்வாராவை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கைதானவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களின் போராட்டம் நேற்று 3-வது நாளாக நீடித்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உத்தரகாண்ட் போலீஸார் மற்றும் ராணுவ வீரர்கள் குருத்வாரா வளாகத்தில் குவிக்கப்பட்டு உள்ளனர்.