வெற்றிச் சின்னத்தை காண்பிக்கும் மம்தா பானர்ஜி
கொல்கத்தா: மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கு ஏப்ரல் 23, 29 ஆகிய இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் (மே 4) எண்ணப்பட உள்ளன. இதை முன்னிட்டு, திரிணமூல் காங்கிரஸ் முகவர்களுடன் காணொளிக் காட்சி மூலம் மம்தா பானர்ஜி உரையாற்றினார்.
அப்போது அவர், “இந்த தேர்தலில் நாம் வெற்றிபெறப் போகிறோம். அதுவும், 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நாம் வெற்றி பெறப் போகிறோம். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள், பங்குச் சந்தையை கையாளும் ஒரு முயற்சியே அன்றி வேறில்லை. அவர்கள் 2021, 2024 தேர்தல்களின்போதும் இதைச் செய்தார்கள். இப்போதும் அதைச் செய்துள்ளார்கள்.
தேர்தல் பணிகளில் ஈடுபட்ட திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் பலர் மீது மத்திய ஆயுதக் காவல் படைகள் கொடூர தாக்குதல்களை நடத்தின. மத்திய ஆயுதக் காவல் படைகளின் கொடூரத்தை எதிர்கொண்டவர்களுக்கு வரும் நாட்களில் கட்சி வெகுமதி அளிக்கும்” எனத் தெரிவித்தார்.
இரண்டாம் கட்ட தேர்தலின்போது வாக்காளர்கள் வாக்களிக்க முடியாதவாறு தடுக்கப்பட்டதாக பாஜக அளித்த புகாரின் பேரில், இரண்டு தொகுதிகளில் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு தேர்தல் நடத்தப்பட்டது. இதில், பிற்பகல் மூன்று மணி வரை 72.43% வாக்குகள் பதிவாகின.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்: மேட்ரிஸ் நிறுவனம் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் மேற்கு வங்கத்தில் பாஜக 146 முதல் 161 இடங்களையும், திரிணமூல் காங்கிரஸ் 125 முதல் 140 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவித்துள்ளது.
பி-மார்க் நிறுவனம் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் பாஜக அணி 150 முதல் 175 இடங்களையும், திரிணமூல் காங்கிரஸ் 118 முதல் 138 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவித்துள்ளது. பீப்பிள்ஸ் பல்ஸ் நிறுவனம் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் திரிணமூல் காங்கிரஸ் 177 முதல் 187 இடங்களையும், பாஜக அணி 95 முதல் 110 இடங்களை கைப்பற்றும் என தெரிவித்துள்ளது.