

புதுடெல்லி: இந்திய விமானப்படை சுமார் ரூ.21,935 கோடி செலவில் 56 சி-295 போக்குவரத்து விமானங்களை கொள்முதல் செய்து வருகிறது. இதில் 40 விமானங்கள் குஜராத் மாநிலம், வதோதராவில் உள்ள உற்பத்தி ஆலையில், ஏர்பஸ் நிறுவனத்துடன் இணைந்து டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனத்தால் அசெம்பிள் செய்யப்பட உள்ளன.
இந்நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதலாவது 'சி-295' ராணுவப் போக்குவரத்து விமானம் தனது முதல் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. இந்த வெற்றிகரமான சோதனை ஓட்டத்திற்கு பின்னணியில் இருந்த ஒட்டுமொத்தக் குழுவுக்கும் இந்திய விமானப்படை தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.