ம.பி.யில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து

ம.பி.யில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து
Updated on
1 min read

ரத்லாம்: மத்தியப் பிரதேசத்தின் ரத்லாம் மாவட்டத்தில், திருவனந்தபுரம் - ஹஸ்ரத் நிஜாமுதீன் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி பெட்டியில் இன்று (மே 17) காலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டபோது அந்தப் பெட்டியில் 68 பயணிகள் இருந்தனர்.

மத்தியப் பிரதேசத்தின் ரத்லாம் மாவட்டத்தில் மேற்கு மத்திய ரயில்வேயின் கீழ் வரும் லூனி ரிச்சா மற்றும் விக்ரம்கர் அலோட் ரயில் நிலையங்களுக்கு இடையே, திருவனந்தபுரம் - ஹஸ்ரத் நிஜாமுதீன் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலின் பி1 ஏசி பெட்டியிலும், அதனுடன் இணைந்திருந்த எஸ்எல்ஆர் இருக்கை மற்றும் சரக்குப் பெட்டியிலும் இன்று அதிகாலை 5:15 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் எந்தவிதமான காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை.

பி1 பெட்டியிலிருந்து புகை மற்றும் நெருப்பு வெளியேறுவதைக் கண்ட ரயில் காவலர், முதலில் ரயில் ஓட்டுநரை எச்சரித்தார். அதைத் தொடர்ந்து ரயில் நிறுத்தப்பட்டு, அவசர வெளியேற்ற நடைமுறைகள் தொடங்கப்பட்டன. ரயிலின் மேல்நிலை மின்சாரம் (OHE) உடனடியாகத் துண்டிக்கப்பட்டதுடன், தீ மேலும் பரவாமல் தடுப்பதற்காக பாதிக்கப்பட்ட பெட்டி ரயிலிலிருந்து தனியாகப் பிரிக்கப்பட்டது.

ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள், ரயிலில் பணியில் இருந்த ரயில்வே ஊழியர்கள் மற்றும் பிற அதிகாரிகளுடன் இணைந்து, பயணிகளை உடனடியாக ரயிலிலிருந்து இறக்கும் பணியைத் தொடங்கினர். சுமார் 15 நிமிடங்களுக்குள் அந்தப் பெட்டி முழுமையாகக் காலி செய்யப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அருகிலுள்ள பெட்டிகளிலிருந்த பயணிகளும் வெளியேற்றப்பட்டனர்.

"பாதிக்கப்பட்ட பெட்டியிலிருந்த அனைத்துப் பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இதனால் எந்தவொரு பயணிக்கும், ரயில்வே ஊழியருக்கும் காயம் ஏற்படவில்லை" என்று மேற்கு மத்திய ரயில்வே தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தீ விபத்துக்கான காரணம் தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். தீ விபத்தின் காரணத்தை கண்டறியும் வகையில், பாதிக்கப்பட்ட பெட்டியையும் அதனுடன் தொடர்புடைய உபகரணங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

ம.பி.யில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து
காலநிலை ஆர்வலர் வைத்த கோரிக்கையை ஏற்ற முதல்வர் விஜய்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in