

மகாராஷ்டிர மாநில உள்துறை இணை அமைச்சர் யோகேஷ் கதம்
மும்பை: நம் நாட்டில் பொது சிவில் சட்டமானது (யூசிசி) தற்போது கோவா, உத்தராகண்ட், குஜராத், அசாம் ஆகிய பாஜக ஆளும் மாநிலங்களில் அதிகாரப்பூர்வமாக நடைமுறையில் உள்ளது அல்லது சட்டமாக இயற்றப்பட்டுள்ளது.
இதில் சில மாநிலங்கள் ஏற்கெனவே சட்டத்தை அமல்படுத்தி விட்ட நிலையில், மற்றவை அதற்கான இறுதிக் கட்டப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் மகாராஷ்டிராவிலும் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர அந்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து மகாராஷ்டிர மாநில உள்துறை இணை அமைச்சர் யோகேஷ் கதம் நேற்று சட்டப்பேரவையில் கூறியதாவது: மகாராஷ்டிராவில் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவதில் 100 % உறுதியாக உள்ளோம். இதற்கான வரைவு மசோதாவைத் தயாரிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
வரைவு மசோதாவைத் தயாரிப்பதற்கான பணிகளில் இந்தக் குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த சட்டம் மூலம் பலதார மணம் தடை செய்யப்படும். இந்தச் சட்டம் அமலுக்கு வரும்போது பல தார மணம் செய்பவர்களுக்கு 7 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்க வழி வகை செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.