

மகாராஷ்டிரா மாநகராட்சி தேர்தல்
மும்பை: மகாராஷ்டிரா மாநில மாநகராட்சி தேர்தலில் 68 இடங்களில் போட்டியின்றி மகாயுதி கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதில் பாஜக 44, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 22 மற்றும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 29 மாநகராட்சிகளுக்கான வாக்குப்பதிவு வரும் 15-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் நடந்தது. வேட்புமனுவை தாக்கல் செய்த வேட்பாளர்கள், தங்கள் மனுவை திரும்ப பெறுவதற்கான நேற்றைய நாளில் (ஜன.2) மொத்தம் 68 இடங்களில் பாஜக, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக போட்டியிட இருந்த வேட்பாளர்கள், தங்கள் மனுவை திரும்பப் பெற்றனர். இதையடுத்து இந்த இடங்களில் மகாயுதி கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
இதில் கல்யாண் - டோம்பிவிலி நகராட்சியில் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. இதேபோல புனே, பிம்ப்ரி சின்ச்வாட், பன்வெல், பிவாண்டி, துலே, ஜல்கான் மற்றும் அஹில்யா நகர் உள்ளிட்ட இடங்களிலும் பாஜக போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளது.
தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் புனேவின் மேயராக பாஜக-வை சேர்ந்த வெற்றி வேட்பாளர் ஒருவர் பொறுப்பேற்பார் என மத்திய அமைச்சர் முரளிதர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பாஜக மாநில தலைவர் ரவீந்திர சாவான் மற்றும் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் தேர்தல் வியூகம் இதன் பின்னணியில் இருப்பதாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும் அக்கட்சியினர் கருதிகின்றனர்.
எதிர்க்கட்சி விமர்சனம்: மாநகராட்சி தேர்தலில் மகாயுதி கூட்டணி 68 இடங்களில் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ள நிலையில், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அமலாக்கத் துறை, சிபிஐ போன்ற அமைப்புகள் மூலம் மிரட்டல் விடுத்தும், லஞ்சம் கொடுத்தும் தங்களை எதிர்த்து போட்டியிடுபவர்களை தேர்தலில் இருந்து விலகச் செய்துள்ளதாக உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சி எம்.பி பிரியங்கா சதுர்வேதி விமர்சித்துள்ளார்.