

பெங்களூரு: கர்நாடகாவில் திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலியைக் காருக்குள் பெட்ரோல் குண்டு வைத்து கொல்ல முயன்ற காதலன் தீப்பிடித்து எரிந்து உயிரிழந்தார்.
கர்நாடக மாநிலம் உத்தரா கன்னட மாவட்டத்தில் உள்ள அங்கோலாவைச் சேர்ந்தவர் நாகேந்திரா (30). இவர் அதே ஊரை சேர்ந்த ரம்யாவை (26) கடந்த 6 ஆண்டுகளாகக் காதலித்து வந்தார். இந்நிலையில், அவருக்கு வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடந்ததால் நாகேந்திராவைப் பிரிய முயன்றதாகத் தெரிகிறது.
இதனால் கோபமடைந்த நாகேந்திரா பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருந்தக ஊழியராக பணியாற்றி வந்த ரம்யாவைச் சந்திப்பதற்காக நேற்று பெங்களூரு வந்தார். அவரை தன்னுடன் சொந்த ஊருக்கு வருமாறு வாடகை காரில் அழைத்து சென்றார்.
தும்கூர் மாவட்டத்தில் சிரா அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது நாகேந்திராவுக்கும் ரம்யாவுக்கும் இடையே காதல் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ரம்யா திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார். இதனால் நாகேந்திரா ரம்யாவைக் கத்தியால் தாக்கியதால், அவர் ஓடும் காரில் இருந்து கீழே குதித்தார்.
இதனால் ஓட்டுநர் பிரவீன் காரை நிறுத்தி கீழே இறங்கியுள்ளார். எனவே ஆத்திரமடைந்த நாகேந்திரா தன் பையில் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் வெடிகுண்டை ரம்யா மீது வீச முயன்றார். ஆனால் எதிர்பாராத விதமாக குண்டு வெடித்ததால் கார் தீப்பிடித்ததில் நாகேந்திரா சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த தும்கூர் போலீசார் காயமடைந்த ரம்யாவையும் ஓட்டுநர் பிரவீனையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும் வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்தனர். வெடி பொருட்கள் மற்றும் குண்டுவெடிப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.