

புதுடெல்லி: கடந்த 2023-24-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் உள்நாட்டில் 35 ஹைட்ரஜன் ரயில்களைத் தயாரிக்க ரூ.2,300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎப் ஆலையில் முதல் ஹைட்ரஜன் ரயிலைத் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டது. மொத்தம் 10 பெட்டிகள் கொண்டதாக இந்த ரயில் தயாரிக்கப்பட்டது.
இந்நிலையில், ஹரியானாவின் ஜிந்த்- சோனிபட் நகரங்களுக்கு இடையே அண்மையில் ஹைட்ரஜன் ரயிலின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் தலைநகர் டெல்லியில் இருந்து ஹரியானாவின் ஜிந்த் நகரத்துக்கு மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் ஹைட்ரஜன் ரயில் இயக்கப்பட்டது. இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது.
ஜெர்மனி, சுவீடன், ஜப்பான், சீனா ஆகிய நாடுகளில் மட்டுமே ஹைட்ரஜன் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த பட்டியலில் தற்போது இந்தியாவும் இணைந்திருக்கிறது.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, ‘‘ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் 500 முதல் 600 குதிரைத் திறன் கொண்ட ஹைட்ரஜன் ரயில்களை மட்டுமே இயக்கி வருகின்றன. இந்தியாவில் 1,200 குதிரைத் திறன் கொண்ட ஹைட்ரஜன் ரயில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ரயிலில் நீராவி மட்டுமே வெளியேற்றப்படும்’’ என்றனர்.