

புதுடெல்லி: நவம்பர் 1-ம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் இண்டியா கூட்டணி சார்பாக பிரம்மாண்டப் பேரணி நடைபெறவுள்ளது.
தேர்தல் முறைகேடுகள் மற்றும் வாக்குத் திருட்டுக்கு எதிராக இந்த எதிர்ப்புப் பேரணி நடத்தப்படுகிறது. இந்தச் சூழலில், பேரணியை மிக தீவிரமாக விமர்சித்து, அதன் செய்தி நாடெங்கும் பரவ உதவிய பாஜகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கிண்டலாக ‘மனமார்ந்த நன்றிகளை’ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “மக்களின் வாக்குகள் திருடப்படுகின்றன. வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர்கள் நீக்கப்படுகின்றன.
தட்டிக் கேட்பவர்கள் மீது போலீஸ் தடியடி துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகிறது. இதை நாங்கள் அமைதியாகப் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம். நாடே இதற்கான பதிலைச் சொல்லும்.
வாக்கைக் காப்போம், தேசத்தைக் காப்போம் என்ற முழக்கத்துடன் நவம்பர் 1 அன்று நடைபெற உள்ள ‘டெல்லி சலோ’ பேரணியில் மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள் என அனைவரும் இணைய வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன்.
இந்த பேரணியைப் பற்றித் தொடர்ந்து பேசி, இதை நாட்டு மக்களிடம் கொண்டு சேர்த்த பாஜகவுக்கு மிக்க நன்றி. அடுத்த 7 நாட்களுக்கும் இதே உற்சாகத்தைத் தக்கவைத்துக் கொள்ளுங்கள்” என்று நையாண்டியாக தெரிவித்துள்ளார்.
இண்டியா கூட்டணியின் பேரணிக்கு முன்னதாக, அக்டோபர் 30 அன்று டெல்லி அசோக் ஹோட்டலில் கூட்டணித் தலைவர்கள் மற்றும் எம்பிக்கள் பங்கேற்கும் ‘மாதிரி நாடாளுமன்றம்’ நடைபெறும். அதில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
டெல்லி ராம்லீலா மைதானத்தை நோக்கி காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள் நடத்தும் இந்த மாபெரும் பேரணி, ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான முக்கிய மைல்கல்லாக இருக்கும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணு கோபால் தெரிவித்துள்ளார்.