

சென்னை: ரயில்வே கவுன்ட்டர்களில் நேரடியாகச் சென்று முன்பதிவு செய்யும் பயணிகளுக்கும் விருப்பத்தின் பேரில் பயணக் காப்பீடு வழங்கும் திட்டத்தை நீட்டித்து ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை நாளை அக்.27-ம் தேதி முதல் அனைத்து ரயில்வே மண்டலங்களிலும் அமலுக்கு வருகிறது. உச்ச நீதிமன்றம் கடந்த 6-ம் தேதி வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ரயில்வே வாரியத்தின் பயணிகள் சந்தைப்படுத்துதல் பிரிவு செயல் இயக்குநர் சிவேந்திர சுக்லா, அனைத்து மண்டல ரயில்வே மேலாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கவுன்ட்டர்களில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள் இந்த காப்பீட்டுத் திட்டத்தைப் பெற விரும்பினால், காப்பீட்டுக்கான பிரீமியம் தொகையை டிஜிட்டல் முறைகளில் மட்டுமே செலுத்த வேண்டும். அத்துடன் பயணிகளின் மொபைல் எண் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும். காப்பீட்டைத் தேர்வு செய்யும் பயணிகளுக்கு, அதுகுறித்த பாலிசி விபரங்களை அவர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும்.
பயிற்சி மற்றும் கண்காணிப்பு: இத்திட்டத்தை தொய்வின்றிச் செயல்படுத்த ரயில்வே தகவல் தொழில்நுட்ப மையம் (CRIS), இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் இணைந்து மென்பொருள் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அனைத்து கோட்ட ரயில்வே மேலாளர்கள் மற்றும் வர்த்தக அதிகாரிகள் இந்த நடைமுறையைக் கண்காணிப்பார்கள். டிக்கெட் கவுன்ட்டர் ஊழியர்களுக்கு இதுகுறித்த உரிய ஆலோசனைகளை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்குத் தற்போது நடைமுறையில் உள்ள அதே காப்பீட்டு விதிமுறைகளும், நிபந்தனைகளும் இனி கவுன்ட்டர்களில் எடுக்கும் டிக்கெட்டுகளுக்கும் பொருந்தும் என்று ரயில்வே வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவு என்பதால், இப்பணிகளை ‘மிகவும் அவசரமானது’ என கருதி அக்.27-க்குள் முடிக்க, அனைத்து ரயில்வே மண்டல முதன்மை தலைமை வர்த்தக மேலாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்பு, ரயில்வே முன்பதிவு கவுன்ட்டர்களில் நேரடியாக டிக்கெட் வாங்கும் பயணிகளுக்கு பயணக் காப்பீடு வசதி வழங்கப்படவில்லை. ஆன்லைன் மூலமாக (ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலி வழியாக) இ-டிக்கெட் பதிவு செய்யும் பயணிகளுக்கு மட்டுமே விருப்பத்தின் பேரிலான பயணக் காப்பீடு திட்டம் பிரத்யேகமாக வழங்கப்பட்டது.
இந்த வேறுபாட்டைக் களைவதற்காகவே தற்போது புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தப் புதிய நடைமுறை அக்.27-ல் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. விருப்பத்தின் பேரிலான பயணக் காப்பீடு திட்டத்தில் ஒவ்வொரு பயணிக்கும் 45 பைசா பிரீமியம் தொகையாக வசூலிக்கப்படும். உதாரணமாக, ஒரு டிக்கெட்டில் 4 பேருக்கு முன்பதிவு செய்து காப்பீட்டைத் தேர்வு செய்தால், மொத்தம் ரூ.1.80 பிரீமியமாக வசூலிக்கப்படும். 5 வயதுக்குஉட்பட்ட குழந்தைகள் (தனி இருக்கை-படுக்கை வசதி பெறாதவர்கள்) இந்த காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வரமாட்டார்கள்.
காப்பீட்டுத் தொகை: ரயில் பயணத்தின் போது ஏதேனும் எதிர்பாராத விபத்து ஏற்பட்டால், அதிகபட்சமாக ரூ. 10 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும்.
விபத்தினால் மரணமோ அல்லது நிரந்தர முழு உடல் ஊனமுற்றால் ரூ.10 லட்சம், நிரந்தர பகுதி உடல் ஊனமடைந்தால் ரூ.7.50 லட்சம், காயங்களுக்கான மருத்துவமனை செலவுகள் ரூ. 2 லட்சம் வரையும், உடலை சொந்த ஊருக்குக் கொண்டு செல்ல ரூ. 10 ஆயிரம் என இழப்பீடு பெற முடியும்.
இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி, மூன்றடுக்கு ஏசி வகுப்பு, இரண்டடுக்கு ஏசி வகுப்பு, ஏசி முதல் வகுப்பு என எந்த வகுப்பில் பயணித்தாலும், ஒரு பயணிக்கான பிரீமியம் தொகை தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ளபடி 45 பைசா (வரிகள் உட்பட) மட்டுமே ஆகும். இதில் தொலைவு அல்லது கட்டணத்துக்கு ஏற்ப பிரீமியம் தொகை மாறாது. அனைவருக்கும் நிலையான கட்டணம்தான் வசூலிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.