சோனம் வாங்சுக்கின் உடல்நிலையை கண்காணிக்க அதிகாரிகளுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

சோனம் வாங்சுக்கின் உடல்நிலையை கண்காணிக்க அதிகாரிகளுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லி ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் உடல்நிலையை தினமும் கண்காணிக்க வேண்டும் என்றும் தேவைப்பட்டால் மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் பங்கேற்ற லடாக்கைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், தர்மேந்திர பிரதானின் ராஜினமாவை வலியுறுத்தி கடந்த ஜூன் 28ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

சோனம் வாங்சுக்கின் உடல்நிலையை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் 18-வது நாளை எட்டியுள்ளது. ஆனால் அரசுக்கு அதைப் பற்றிய குறைந்தபட்ச அக்கறைகூட இல்லை. அரசு இவ்விவகாரத்தில் உணர்வற்றதாக இருக்கிறது.

ஒரு கொடுங் குற்றவாளி, தேசத் துரோகி, தீவிரவாதியைப் போல் சோனம் வாங்சுக்-ஐ பாவித்து பாராமுகம் காட்டுகிறது. அவரை இப்படியே இறக்கவிட்டால் அது தேசம் தன் கண் முன்னால் ஒரு குடிமகனை மரணிக்க விடும் அவலம். சோனம் வாங்சுக் இன்னும் 2 தினங்களுக்கு கூட உயிருடன் இருக்க மாட்டார். அவரை உடனடியாக வலுக்கட்டாயமாக உணவு உட்கொள்ளச் செய்யுங்கள்” என்று கோரப்பட்டது.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரப்பட்ட நிலையில், அது இன்று (ஜூலை 16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிபதிகள் டி.கே.உபாத்யாயா, நீதிபதி தேஜஸ் காரியா ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்தது. அப்போது நீதிபதிகள், “ஒவ்வொரு குடிமகனின் உயிரும் விலைமதிப்பற்றது. அதைக் காக்க அரசு அதிகாரிகள் அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்பதை நாங்கள் சுட்டுக்காட்டுகிறோம்” என்றனர்.

மத்திய அரசு மற்றும் டெல்லி அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “ஒவ்வொரு தனிநபரின் உயிரும் விலைமதிப்பற்றது. வாங்சுக்கின் உடல்நிலையை தொடர்ந்து பரிசோதிப்பதில் அரசுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” என்று தெரிவித்தார்.

இதையடுத்து, “சொலிசிட்டர் ஜெனரல் எடுத்துள்ள நிலைப்பாட்டை நாங்கள் பாராட்டுகிறோம். சோனம் வாங்சுக்கின் உடல்நிலையை தினசரி அடிப்படையில் கண்காணிக்கவும். தேவைப்படும் மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உத்தரவிடுகிறோம்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

சோனம் வாங்சுக்கின் உடல்நிலையை கண்காணிக்க அதிகாரிகளுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
கடந்த 2 மாதங்களில் படகுகள் கவிழ்ந்து 500 ரோஹிங்கியா அகதிகள் பலி: ஐ.நா கவலை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in