

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தின் முசாபர் நகரில் கடந்த மார்ச் மாதம், 18 மாதக் குழந்தையுடன் தாய் ஒருவர் உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார். அப்போது குழந்தையின் தாய்க்கு உறவினரான 30 வயது நபர், குழந்தைக்கு பிஸ்கட் வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தார்.
இதையடுத்துக் குழந்தையின் தாய் காவல் நிலையத்தில் புகாரளித்தார். போலீஸார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து அதே நாளில் என்கவுன்ட்டருக்குப் பிறகு அந்த நபரைக் கைது செய்தனர். பின்னர் பாலியல் கொடுமைக்கான ஆதாரங்களைத் திரட்டித் தீவிரமாக விசாரணை நடத்தினர். சாட்சிகளிடம் காவல் துறையினர் விரைந்து விசாரணை நடத்தி வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர். பின்னர் குற்றப்பத்திரிக்கையும் விரைவாகத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கடந்த ஜூலை 3-ம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு, வெறும் 21 நாட்களுக்குள், அதாவது ஜூலை 24-ம் தேதி போக்சோ சிறப்பு நீதிபதி மனோஜ் குமார் சித்து தலைமையிலான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன், குற்றவாளிக்கு ரூ. 2 லட்சம் அபராதம் விதித்து அந்தத் தொகையை முழுமையாகப் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.