

கொல்கத்தா: கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவமனை பயிற்சி பெண் மருத்துவர் கொலை வழக்கில், ஆதாரங்களை அழித்து அவசரமாக உடலைத் தகனம் செய்ய உதவியதாகத் திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. நிர்மல் கோஷ், பானிஹாட்டி கவுன்சிலர் சோமநாத் டே, சஞ்சீவ் முகர்ஜி ஆகியோரை பராக்பூர் காவல்துறையினர் கைது செய்தனர்.
ஒடிசாவின் சம்பல்பூரில் கைதான நிர்மல் கோஷ் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட போது, பொதுமக்கள் அவர் மீது முட்டை, சேறு வீசித் தாக்குதல் நடத்தியதுடன் "திருடன்" என முழக்கமிட்டனர்.
மருத்துவப் பரிசோதனைக்குப் பின் ஹெல்மெட் அணிவித்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட போதிலும், கூட்டத்தினர் செருப்பு மற்றும் காலணி மாலைகளை வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர்.
பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட முதன்மை வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், ஆதாரங்களை மறைத்து அவசரமாகத் தகனம் செய்த குற்றச்சாட்டிற்காகப் பராக்பூர் காவல் ஆணையரகம் தனியாகப் புதிய எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதில் புதிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், கைதான நபர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.