

கடலை மிட்டாயை பேக்கிங் செய்யும் பெண்கள்.
கோவில்பட்டி: ஈரான் போர், பேக்கிங் பொருட்களின் விலை உயர்வு காரணமாக கோவில்பட்டியில் கடலை மிட்டாய் உற்பத்தி 30 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் சுத்த கரிசல் மண் பூமி என்பதால் இப்பகுதியில் விளைவிக்கப்படும் நிலக்கடலைக்கு இயற்கையாகவே இனிப்பு சுவை உள்ளது. இந்த நிலக்கடலைகளை கொண்டு தயாரிக்கப்படும் கடலை மிட்டாய்கள் உலக பிரசித்தி பெற்றது.
தரமான நிலக்கடலைகளை வறுத்து, தொலி நீக்கி வைத்துக்கொண்டு, கம்பி பதத்துக்கு வரும் வெல்லப்பாகுடன் கலந்து நன்றாக கிளறி உருண்டையாக எடுக்கின்றனர். பின்னர் சப்பாத்தி தயார் செய்வது போல் வைத்து, தேவைக்கேற்ப வெட்டி எடுக்கின்றனர்.
இந்த கடலை மிட்டாய்கள் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மேலும், இந்தியா முழுவதும் கடலை மிட்டாய் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கோவில்பட்டியில் குடிசை தொழிலாகவும், கடைகளாகவும் சுமார் 120 இடங்களில் கடலை மிட்டாய் உற்பத்தி செய்யப்படுகிறது.
சிறப்பு வாய்ந்த கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு கடந்த 2020-ம் ஆண்டு ஏப்.30-ம் தேதி புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. புவிசார் குறியீடு பெற்ற பின்னர் லண்டன், அமெரிக்கா, பஹ்ரைன், கத்தார், சிங்கப்பூர், குவைத் உள்ளிட்ட நாடுகளுக்கும் கடலை மிட்டாய் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
ஏற்றுமதி தடைபட்டது
இந்நிலையில் ஈரான் - இஸ்ரேல் இடையே போர் தொடங்கிய பின்னர், கத்தார், குவைத், பஹ்ரைன் ஆகிய வளைகுடா நாடுகளுக்கு கடலைமிட்டாய் ஏற்றுமதி முற்றிலுமாக தடைபட்டுவிட்டது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே கடலைமிட்டாயின் மூலப்பொருளான நிலக்கடலை வரத்து குறைத்து விலை கடுமையாக உயர்ந்தது.
இதனால் கடலைமிட்டாய் விலையையும் உயர்த்துவதாக உற்பத்தியாளர்கள் அறிவித்தனர். ஆனால், தற்போது பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வால், கடலைமிட்டாய் பேக்கிங் செய்ய பயன்படும் பிளாஸ்டிக் ஜார், பிளாஸ்டிக் பேப்பர் உள்ளிட்டவைகளின் விலை சுமார் 60 முதல் 70 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
இதனால் தங்களுக்கு கடும் நஷ்டம் ஏற்படுவதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கோவில்பட்டி கடலை மிட்டாய் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் நலச் சங்க செயலாளர் கண்ணன் கூறியதாவது: ஈரான் போர் தொடங்கியதில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு கடலை மிட்டாய் ஏற்றுமதி செய்யப்படவில்லை.
கோவில்பட்டியில் உள்ள கடையில் கடலைமிட்டாய் தயாரிக்கும் பணி நடக்கிறது
போருக்கு பின்னர் கடலைமிட்டாய் பேக்கிங் செய்யும் கவர், ஜார் ஆகியவற்றின் விலை படிப்படியாக 70 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. அப்படியிருந்தும் அவை கிடைப்பதில் தட்டுப்பாடு உள்ளது. இதனால் நிலையான விலை வைத்து வியாபாரிகளுக்கு வழங்க முடியாத சூழல் உள்ளது.
இதன் காரணமாக உற்பத்தியும் குறைந்துள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நிலக்கடலை பருப்பின் விலை உயர்ந்ததால், அதற்கேற்ப கடலைமிட்டாய் விலையை அதிகரித்தோம். தற்போது பேக்கிங் பொருட்கள் விலை உயர்ந்துள்ளது என நாங்கள் விலையை உயர்ந்தினால் வியாபாரிகள் கடலைமிட்டாயை வாங்க முன் வரமாட்டார்கள்.
இதனால் வியாபாரம் தடைபட்டு வருகிறது. போர் தொடங்கியதில் இருந்து வியாபாரம் குறைந்து கொண்டே வருவதால் கடலை மிட்டாய் உற்பத்தி சுமார் 30 சதவீதம் வரை குறைந்து விட்டது என்றார்.
ஜிஎஸ்டி வரி தளர்வு அளிக்க மதிமுக வலியுறுத்தல்
மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி., மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயலிடம் மனு அளித்தார். அதில், ‘மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் போர் சார்ந்த பதற்ற நிலை காரணமாக, கோவில்பட்டி கடலை மிட்டாய் வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, ஏற்றுமதிக்காக தயாராக இருந்த பொருட்கள் விற்பனையின்றி கிடப்பில் உள்ளன. ஏற்றுமதி தடை, நிலக்கடலை மற்றும் பெட்ரோலியம் சார்ந்த பொதியிடும் பொருட்களின் விலை உயர்வு ஆகியவை இணைந்து, கடலை மிட்டாய் உற்பத்தியாளர்களை கடுமையான நிதி நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.
இந்த சூழ்நிலையில், கிடப்பில் உள்ள பொருட்களை உள்நாட்டில் விற்பனை செய்ய வசதியாக தற்காலிக ஜிஎஸ்டி தளர்வு வழங்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். மேலும், இந்த சத்தான பாரம்பரிய உணவுப் பொருளை பிரதமர் போஷன் (மதிய உணவுத் திட்டம்) திட்டத்தின் மூலம் கொள்முதல் செய்வதையும் அரசு பரிசீலிக்கலாம்.
இத்துறையில் நிலவும் கடுமையான நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டு, வங்கிகள் கடன் திருப்பிச் செலுத்துவதில் அவகாசம் (மொரட்டோரியம்) வழங்கவும், பாதிக்கப்பட்ட எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு கூடுதல் வேலை மூலதன உதவி வழங்கவும் அறிவுறுத்தப்பட வேண்டும். இதன் மூலம் உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்ச்சியாக நிலை நிறுத்தப்படலாம்’, என தெரிவித்துள்ளார்.