

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம், ருத்ரபிரயாக் மாவட்டத்தில் கேதார்நாத் கோயில் அமைந்துள்ளது. சுமார் 11,755 அடி உயரத்தில் உள்ள இந்த கோயில் கோடை காலத்தில் மட்டுமே திறந்திருக்கும்.
கடந்த 22-ம் தேதி கேதார்நாத் கோயில் நடை திறக்கப்பட்டது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மக்கள் உத்தராகண்டின் கவுரிகுண்ட் பகுதியை சாலை வழியாக சென்றடைந்து, அங்கிருந்து 16 கி.மீ. தொலைவு பாதசாரியாக மலையேறி கேதார்நாத் கோயிலுக்கு செல்ல வேண்டும்.
சில நாட்களுக்கு முன்பு கோயில் வளாகத்தில் உள்ள கடையில் பெண் பக்தர் ஒருவர் குடிநீர் பாட்டில் வாங்கினார். ரூ.20 விலை குறிப்பிடப்பட்ட ஒரு லிட்டர் பாட்டிலுக்கு கடைக்காரர் ரூ.100 வசூலித்தார். எதற்காக அதிக தொகை வாங்குகிறீர்கள் என்று பெண் பக்தர் கேட்டபோது கடைக்காரர் கூறியதாவது:
கேதார்நாத் கோயில் 5 மாதங்கள் வரை மட்டுமே திறந்திருக்கும். கோயில் வளாகத்துக்கு வருவதற்கு சாலை வசதி கிடையாது. இதனால் வாகனங்களில் பொருட்களை கொண்டு வர முடியாது. கோவேறு கழுதைகள் அல்லது தொழிலாளர்கள் மூலம் மட்டுமே பொருட்களை கோயில் வளாகத்துக்கு கொண்டு வர முடியும்.
ஒரு கோவேறு கழுதையில் 48 குடிநீர் பாட்டில்களை மட்டுமே எடுத்து வர முடியும். அதற்கு ரூ.3,500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரு தொழிலாளி தனது முதுகில் 40 கிலோ எடையை மட்டுமே சுமந்து வர முடியும். அவருக்கு ரூ.2,500 கூலி கொடுக்க வேண்டும்.
இந்த செலவைக் கணக்கிட்டே ரூ.20 மதிப்புள்ள ஒரு லிட்டர் குடிநீர் பாட்டிலுக்கு ரூ.80 முதல் ரூ.100 வரை வசூலிக்கிறோம். எங்களுக்கு குறைவான லாபம் மட்டுமே கிடைக்கிறது. இவ்வாறு கடைக்காரர் தெரிவித்துள்ளார். பெண் பக்தர், கடைக்காரர் இடையிலான இந்த உரையாடல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.