

புதுடெல்லி: ஐபிஎல் லீக் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தியது. கே.எல்.ராகுல் அதிரடியாக விளையாடி சதமடித்தபோதும், பஞ்சாப் வீரர்கள் சிக்ஸர்களும், பவுண்டரிகளுமாக விளாசி 18.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டினர்.
பஞ்சாப், டெல்லி அணிகள் மோதிய இந்த ஆட்டம் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெற்றது. முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 264 ரன்கள் குவித்தது.
பதும் நிசங்கா 7 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து அர்ஷ்தீப் சிங் பந்தில் பிரப்சிம்ரனிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து 2-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த நிதிஷ் ராணாவும், கே.எல்.ராகுலும் பந்தை பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் விளாசினர். இதனால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.
நிதிஷ் ராணா 44 பந்துகளில் 11 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 91 ரன்கள் குவித்து, சேவியர் பார்ட்லெட் பந்தில் வீழ்ந்தார். மறுமுனையில் அதிரடி காட்டிய கே.எல்.ராகுல் 67 பந்துகளில் 16 பவுண்டரி, 9 சிக்ஸர்கள் விளாசி 152 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். டேவிட் மில்லர் 3 பந்துகளில் 3 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.
இதையடுத்து 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பஞ்சாப் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் ஆகியோர் முதல் ஓவரிலிருந்தே விளாசத் தொடங்கினர். பிரியான்ஷ் 17 பந்துகளில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 43 ரன்கள் எடுத்தநிலையில் அக்சர் படேல் பந்தில் வீழ்ந்தார்.
மறுமுனையில் பிரப்சிம்ரன் அதிரடி காட்டினார். அவர் 26 பந்துகளில் 9 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 76 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். கூப்பர் கானொலி 10 பந்துகளில் 17 ரன்களும், நேஹல் வதேரா 15 பந்துகளில் 25 ரன்களும் சேர்த்து வீழ்ந்தனர்.
5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் ஸ்ரேயஸ் ஐயரும், சஷாங்க் சிங்கும் அதிரடியாக விளையாடி 18.5 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டினர். கடினமான இலக்காக இருந்தபோதிலும் பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன், ஸ்ரேயஸ் ஐயர், ஆகியோரது அதிரடி ஆட்டத்தால் பஞ்சாப் அணி எளிதாக வெற்றி இலக்கை எட்டியது.
ஸ்ரேயஸ் 36 பந்துகளில் 3 பவுண்டரி, 7 சிக்ஸர்களுடன் 71 ரன்களும், சஷாங்க் 19 ரன்களும் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் 7 ஆட்டங்களில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி 6 வெற்றி, ஒரு முடிவு இல்லாத ஆட்டம் என மொத்தம் 13 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. இந்தத் தொடரில் தோல்வியே காணாத அணி என்ற பெருமையை பஞ்சாப் பெற்றுள்ளது.
அதேநேரத்தில் டெல்லி அணி 7 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 4 தோல்விகளுடன் 6 புள்ளிகளைப் பெற்றுள்ளது. ஆட்டநாயகனாக ராகுல் தேர்வு செய்யப்பட்டார்.
அதிக ரன்: டி20 போட்டியின் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற பெருமையை கே.எல்.ராகுல் பெற்றுள்ளார். பஞ்சாப் அணிக்கெதிரான நேற்றைய ஆட்டத்தில் 152 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார்.
இந்தப் பட்டியலில் திலக் வர்மா 151 ரன்களுடனும், அபிஷேக் சர்மா 148 ரன்களுடனும், ஸ்ரேயஸ் ஐயர் 147 ரன்களுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
4-வது இடம்: ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் ராகுல் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ராகுல் 5,579 ரன்களுடன் உள்ளார். இந்த வரிசையில் விராட் கோலி (8,989 ரன்கள்) முதலிடத்திலும், ரோஹித் சர்மா (7,183 ரன்கள்) 2-வது இடத்திலும், ஷிகர் தவண் (6,769 ரன்கள்) 3-வது இடத்திலும், டேவிட் வார்னர் (6,565 ரன்கள்) 4-வது இடத்திலும் உள்ளனர்.
சேஸிங்கில் சாதனை: டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கெதிராக டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் 265 ரன்கள் என்ற இலக்கை 18.5 ஓவர்களிலேயே எட்டி பஞ்சாப் கிங்ஸ் அணி சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு 2024-ம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக 262 ரன்கள் என்ற இலக்கை பஞ்சாப் அணி விரட்டி சாதனை படைத்திருந்தது. தற்போது தனது சாதனையை தானே முறியடித்துள்ளது பஞ்சாப் அணி. மேலும், ஐபிஎல் போட்டிகளில் ஓர் அணி சேஸிங்கில் வெற்றிகரமாக எட்டிய அதிகபட்ச ரன்கள் இதுவாகும். அதுமட்டுமல்லாமல், டெல்லி அணி பேட்டிங்கின்போது 2-வது விக்கெட்டுக்கு கே.எல்.ராகுல் - ராணா ஜோடி 220 ரன்கள் குவித்து சாதனை படைத்தது.
4 ஆயிரம் ரன்கள்: நேற்றைய ஆட்டத்தின்போது ஐபிஎல் போட்டிகளில் 4 ஆயிரம் ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் ஸ்ரேயஸ் ஐயர் இணைந்தார். அவர் தற்போது 140 போட்டிகளில் விளையாடி 4,010 ரன்களை எடுத்துள்ளார். இதேபோல் டெல்லி அணி வீரர் நிதிஷ் ராணா ஐபிஎல் போட்டிகளில் 3 ஆயிரம் ரன்களைக் கடந்துள்ளார்.
லுங்கி நிகிடி காயம்: டெல்லியில் நடைபெற்ற பஞ்சாப், டெல்லி அணிகளிடையிலான போட்டியின் போது டெல்லி வீரர் லுங்கி நிகிடி காயமடைந்தார். டெல்லி அணி ஃபீல்டிங் செய்துகொண்டிருந்தபோது, பஞ்சாப் வீரர் பிரியான்ஷ் அடித்த பந்தை பின்புறமாக ஓடிச் சென்று லுங்கி நிகிடி பிடிக்க முயன்றார். ஆனால் பந்தைப் பிடிக்காமல் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவர் தலையில் அடிபட்டு மயக்கமடைந்தார். இதையடுத்து மருத்துவர்கள் மைதானத்துக்கு வந்து அவரைப் பரிசோதித்தனர். இதைத் தொடர்ந்து மைதானத்துக்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர் கரோல் பாக்கிலுள்ள மேக்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் நலமுடன் உள்ளதாக டெல்லி அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது. லுங்கி நிகிடிக்குப் பதிலாக, துஷ்மந்தா சமீரா களத்தில் ஃபீல்டிங் செய்தார்.