பெங்களூருவில் திமுக கொடி, பேனரை அகற்றிய கன்னட அமைப்பினர்: காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?

பெங்களூருவில் திமுக கொடி, பேனரை அகற்றிய கன்னட அமைப்பினர்: காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?
Updated on
1 min read

பெங்களூரு: பெங்களூருவில் திமுக சார்பில் வைக்கப்பட்டிருந்த பொங்கல் வாழ்த்து பேனர், திமுக கொடி ஆகியவற்றை கன்னட அமைப்பினர் அகற்றியது சலசல‌ப்பை ஏற்படுத்தியது.

பெங்களூரு டேனரில் சாலையில் உள்ள பாபா சாகேப் அம்பேத்கர் சதுக்கத்தில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கர்நாடக மாநில திமுக சார்பில் பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதில் தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர், தமிழில் பேனர் வைக்கக்கூடாது என கிழித்தனர். மேலும் அங்கிருந்த திமுக கொடி கம்பத்தில் இருந்த கருப்பு சிவப்பு கொடியை அகற்றிவிட்டு, மஞ்சள் சிவப்பு கன்னட கொடியை ஏற்றினர்.

அப்போது கன்னட அமைப்பினர் கூறுகையில், “ஈரோடு மாவட்டத்தில் கன்னட கொடி கட்டி சென்ற ஐயப்ப பக்தர்களை தமிழ் அமைப்பினர் தாக்கியுள்ளனர். அதனை வன்மையாக கண்டிக்கிறோம். கர்நாடகாவில் தமிழ் பேனர், கொடி, போஸ்டர் எதனையும் அனுமதிக்க மாட்டோம்” என தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து பெங்களூருவில் சாலைகளில் திமுக, அதிமுக கொடிக்கட்டி கொண்டு சென்ற வாகனங்களை வழிமறித்து, அதனை கன்னட அமைப்பினர் அகற்றினர்.

திமுக கொடி அகற்றப்பட்ட சம்பவம் குறித்து கர்நாடக திமுக அமைப்பாளர் ராமசாமி, காடுகொண்டனஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து ராமசாமி கூறுகையில், “திமுக கொடியை அகற்றிய விவகாரத்தில் போலீஸார் சற்று பொறுமையாக இருக்குமாறு எங்களை கேட்டுக்கொண்டுள்ளனர். கன்னட அமைப்பினரின் செயலை எக்காரணம் கொண்டும் ஏற்க முடியாது என போலீஸாரிடம் கூறினோம். இன்னும் ஓரிரு நாட்களில் அங்கு மீண்டும் திமுக கொடியை ஏற்ற வழிவகை செய்வதாக உறுதியளித்தனர்.

தமிழகத்தில் சிலர் செய்யும் தவறான காரியங்களால் கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் நேரடியாக பாதிக்கப் படுகின்றனர். கன்னட அமைப்பினர் சாலைகளில் கண்கொத்தி பாம்பாக தமிழர்களை கண்காணித்து வருகின்றனர். ஒரு சிலரின் தவறான நடவடிக்கை கன்னடர் தமிழர் ஒற்றுமைக்கு கேடு விளைவிக்கிறது. இந்த விவகாரத்தில் அரசும், காவல்துறையும் உடனடியாக தலையிட்டு, சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும்” என்றார்.

பெங்களூருவில் திமுக கொடி, பேனரை அகற்றிய கன்னட அமைப்பினர்: காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?
நாய்க்கு துலாபாரம் செலுத்திய நடிகை: தெலங்கானாவில் பக்தர்கள் கொந்தளிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in