

ஹைதராபாத்: ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவரும், முன்னாள் ஆந்திர முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டியின் சட்டவிரோத சொத்துக்குவிப்பு வழக்கில், அமலாக்கத்துறை தொடர்பான வழக்குகளை இனி தினந்தோறும் ஹைதராபாத் சிபிஐ நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
ஹைதராபாத் நாம்பல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கு கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனிடையே ஜெகன் மோகன் ரெட்டி முதல்வர் ஆனதால், ‘முதல்வர் பதவியில் இருப்பவர் ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தில் ஆஜராகும்போது அரசுப் பணம் அதிகம் செலவாகிறது’ என்பதை காரணம் காட்டி நேரில் ஆஜராக விலக்கு கோரினார். நீதிமன்றமும் அனுமதி அளித்ததால் வழக்கு மந்தமானது.
ஜெகன் மோகன் ரெட்டியின் சொத்துக்குவிப்பு வழக்கை சிபிஐயும், அமலாக்கத்துறையும் விசாரித்தன. இதில் அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகை கடந்த 9 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இந்நிலையில், அமலாக்கத்துறையினர் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அதில், “இதுவரை ஜெகன் மோகன் வழக்கை சிபிஐ மட்டுமே விசாரித்து வருகிறது; எங்கள் துறையின் வழக்கு ஏற்கப்படவில்லை.
எனவே, எங்கள் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையையும் ஏற்று, சிபிஐ நீதிமன்றம் தினசரி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்” எனக் கோரப்பட்டிருந்தது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இனி அமலாக்கத்துறையின் வழக்கையும் சேர்த்துத் தினசரி விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், இது தொடர்பாக ஜெகன் மோகனின் வழக்கறிஞர்களுக்கு நோட்டீஸ் பிறப்பித்தார்.