

புதுடெல்லி: டெல்லி ஜந்தர் மந்தரில் அத்துமீறி நுழைந்ததாகக் கைதான சிஜேபி நிர்வாகிகளை 5 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி (எஸ்ஐஆர்) நடவடிக்கையில் முறைகேடுகள் நடைபெறுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக்கோரி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சார்பில், டெல்லியில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால், போராட்டத்துக்கு அனுமதி மறுத்த டெல்லி காவல் துறை, ஜந்தர் மந்தர் பகுதியை போராட்டம் நடத்துவதற்கான களப் பட்டியலில் இருந்து நீக்கி உத்தரவிட்டது.
இந்நிலையில், சிஜேபி முன்னணி நிர்வாகிகளான சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா, அஜிங்கியா ஷிண்டே ஆகியோர் ஜந்தர் மந்தர் பகுதியைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அரண்களைத் தாண்டி உள்ளே நுழைய முற்பட்டனர். கையில் தேசியக் கொடியுடன் ஜந்தர் மந்தரில் நுழைந்த அவர்களை டெல்லி காவல் துறையினர் கைது செய்து, பின்னர் டெல்லி சிறப்பு நிர்வாக நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதனையடுத்து, அசுதோஷ் ரங்கா, சவுரவ் தாஸ் ஆகியோரை 5 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதேநேரம் அஜிங்கியா ஷிண்டேவை ரூ.5 ஆயிரம் பிணைத் தொகையுடன், அடுத்த ஓராண்டுக்கு அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலான போராட்டங்களில் ஈடுபடக் கூடாது என்ற நிபந்தனையுடன் விடுவித்தது.
முன்னதாக, கடந்த 10-ம் தேதி மும்பையில் இருந்து போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லி வந்த அபிஜித் திப்கே, சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நிர்வாக நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, அடுத்த ஓராண்டுக்கு அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலான போராட்டங்களில் ஈடுபடக் கூடாது என்றும், நிபந்தனைகளை மீறினால் நடவடிக்கை பாயும் எனவும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.