

புதுடெல்லி: இஸ்ரோ ஒருபோதும் தனியார் மயமாக்கப்படமாட்டாது என தேசிய விண்வெளி ஊக்குவிப்பு அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனியார்மயமாக்கப்பட உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதுகுறித்து தெளிவான தகவலை தெரிவிக்க வேண்டும் என 9 இஸ்ரோ ஊழியர் சங்கங்கள் கோரிக்கை வைத்திருந்தன.
இதையடுத்து, இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அனுமதி மையத்தின் (இன்ஸ்பேஸ்) தலைவர் பவன் கோயங்கா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இஸ்ரோ தனியார்மயமாக்கப்பட உள்ளதாக ஊகத்தின் அடிப்படையில் வெளியான தகவலில் உண்மை இல்லை. இஸ்ரோ ஒருபோதும் தனியார் மயமாக்கப்படமாட்டாது. அதன் முக்கியத்துவமும் குறைக்கப்படமாட்டாது.
விண்வெளியில் தனியார் துறையின் பங்கேற்பு என்பது அதன் பங்கைக் குறைப்பது பற்றியது அல்ல. முதிர்ந்த தொழில்நுட்பங்களையும் திறன்களையும் தொழில் துறை வளர்த்தெடுக்கும் அதேவேளையில், இந்தியாவின் அடுத்த தலைமுறை விண்வெளித் திட்டத்தின் மீது இஸ்ரோ இன்னும் தீவிர கவனம் செலுத்த உதவும். மாறிக்கொண்டிருப்பது இஸ்ரோவின் முக்கியத்துவம் அல்ல, மாறாக இந்தியாவின் விண்வெளி சுற்றுச்சூழல் அமைப்பின் அளவும் கட்டமைப்பும்தான்.
2020 முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்தங்கள் இந்தியாவின் ஒட்டுமொத்த விண்வெளி சுற்றுச்சூழல் அமைப்பை விரிவுபடுத்துவது குறித்தே ஆகும். இன்ஸ்பேஸ் என்பது தனியாரின் விண்வெளி துறை பங்களிப்பை மேலும் எளிதாக்கி அனுமதி வழங்கும். மேம்பட்ட விண்வெளி ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு, விண்வெளி அறிவியல், ஆய்வு, முக்கியமான மற்றும் எல்லைப்புற விண்வெளி திறன்கள் ஆகியவற்றுக்கான இந்தியாவின் முதன்மை நிறுவனமாக இஸ்ரோ தொடர்ந்து திகழும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.