

திவ்யா சிங்
லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரை சேர்ந்த ஆசிரியை திவ்யா சிங் (28), சைக்கிளில் எவரெஸ்ட் அடிவார முகாம் (பேஸ் கேம்ப்) சென்றடைந்த முதல் இந்தியப் பெண் மற்றும் உலகின் 2வது பெண் என்ற சாதனையை படைத்துள்ளார்.
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் தனது பயணத்தை தொடங்கிய அவர், 14 நாட்கள் கடினமான பயணத்துக்கு பிறகு 17,560 அடி உயரத்தில் உள்ள அடிவார முகாமை வெற்றிகரமாக சென்றடைந்தார். இந்தப் பயணத்தின்போது, அவர் மைனஸ் 12 டிகிரி வரையிலான கடும் குளிர், குறைவான ஆக்சிஜன் மற்றும் அதிவேகக் காற்றை எதிர்கொண்டுள்ளார். திவ்யா தினமும் 10 முதல் 12 மணிநேரம் செங்குத்தான மற்றும் கரடுமுரடான மலைப் பாதைகளில் சைக்கிள் ஓட்டியுள்ளார்.
சைக்கிள் செல்ல முடியாத இடங்களில், அதை தோளில் சுமந்து கொண்டு முன்னேறினார். அடிவார முகாமை அடைய சலேரி, சுர்கே, பக்டிங், நம்ச்சே பஜார், லோபுச்சே, கோரக் ஷெப் ஆகிய சவாலான இடங்களை அவர் கடந்துள்ளார். அடிவார முகாமை திவ்யா சென்றடைந்த தருணத்தை உமா சிங் என்பவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் திவ்யா, மலைகளின் பின்னணியில் தனது சைக்கிளுக்கு அருகில் தேசியக்கொடி ஏந்தியவாறு காணப்படுகிறார். இந்த வீடியோவுக்கான விளக்கத்தில், “வாழ்த்துக்கள் திவ்யா சிங்; சைக்கிளில் எவரெஸ்ட் அடிவார முகாம் சென்றடைந்த இந்தியாவின் முதல் பெண்மணி நீங்கள்தான். இது நமது கோரக்பூர், உ.பி. மற்றும் இந்தியாவுக்கு ஒரு பெருமையான தருணம்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
திவ்யாவுக்கு சமூக ஊடகங்களில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து ஒருவர் தனது பதிவில், "இதனால்தான் கண்களில் உறுதியுடன் இருக்கும் பெண்களை எனக்குப் பிடிக்கிறது. இதுபோன்று தொடர்ந்து வளர்ந்து வரலாறு படைத்திடுங்கள்" என்று கூறியுள்ளார்.