மதுரை: அதிகாரிகள் அரசு சொத்துகளை பாதுகாப்பதில் அதிக அக்கறை காட்டுவதில்லை என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சேது மாதவன், வேல்முருகன் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், எங்கள் நிலப் பிரச்சினை தொடர்பாக 2001-ல் ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவும், நிலப் பிரச்சினைகளை கையாள்வது தொடர்பாக அரசு அதிகாரிகளுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்கவும் கோரப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கு அரசு புறம்போக்கு நிலத்தை பயன்படுத்துவது தொடர்பானது. இந்த வழக்கில் ஒருதலைப்பட்சமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வட்டாட்சியர் மீது நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால், ஆட்சியர் மீது நடவடிக்கை இல்லை. ஒருதலைப்பட்சமான தீர்ப்பு வழக்கு தள்ளுபடியான நிலையில், அதற்கு எதிராக அரசு தரப்பு மேல்முறையீடு செய்யவில்லை. இதிலிருந்து அதிகாரிகள் அரசு சொத்துகளை பாதுகாப்பதில் அதிக அக்கறை காட்டுவ தில்லை என்பது தெரிகிறது.
பொது நிலங்களின் பாதுகாவலராக இருக்கும் அரசாங்கம், மதிப்பு மிக்க அரசு சொத்துகள் சம்பந்தமாக வழக்கு தொடர்ந்தால் அதனை அமைதியாக பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது.
எனவே, இந்த வழக்கு தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மீது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை முதன்மைச் செயலர் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் அவர் அரசு நிலங்களை பாதுகாப்பது, வழக்கை சந்திப்பது போன்ற விவகாரங்களில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு வழக்கறிஞர்கள் மற்றும் வருவாய் அதிகாரிகளுக்கு தெளிவான வழிகாட்டுதல்களை பிறப்பிக்க வேண்டும்.
அதில் நீதிமன்ற வழக்குகளில் அரசு அதிகாரிகளை எதிர்தரப்பாகச் சேர்க்கும்போது எடுக்க வேண்டிய கட்டாய நடவடிக்கைகள், உத்தரவுகளை ரத்து செய்வதற்கான மனு, மேல்முறையீடுகள் மற்றும் தாமதத்தை மன்னிப்பதற்கான மனுக்கள், ஆட்சியர், மாவட்ட வருவாய் அதிகாரி மற்றும் வருவாய் பிரிவு அதிகாரிகளால் கண்காணிக்கப்படும் வகையில் ஒவ்வொரு தாலுகாவிலும் ஒரு சட்டப் பிரிவை அமைக்க அரசு பரிசீலிக்க வேண்டும்.
வருவாய் அதிகாரி தலைமையிலான சட்டப் பிரிவு, அரசு ஒரு தரப்பாக உள்ள அனைத்து உரிமையியல் வழக்குகளையும் அவ்வப்போது மதிப்பாய்வு செய்து, சரியான நேரத்தில் பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்யும்.
அவ்வப்போது அறிக்கைகள் நில நிர்வாக ஆணையருக்கும், அரசாங்கத்தின் கூடுதல் தலைமைச் செயலருக்கும் அனுப்ப வேண்டும். இதனை அதிகாரிகள் பின்பற்றும் வகையில் 6 மாதத்தில் அரசு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
மதுரை அமர்வின் அதிகார வரம்புக்குள் அரசு எந்தெந்த வழக்குகளில் எதிர்மனுதாரராக உள்ளது என்றும், எடுக்கப் பட்ட நடவடிக்கைகள் குறித்தும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலர் 4 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை மார்ச் 16-க்கு தள்ளி வைக்கப்படுகிறது.