

பிரதமரின் முதன்மை செயலாளர் பி.கே.மிஸ்ரா
புதுடெல்லி: ‘உலகம் முழுவதும் நிச்சயமற்ற சூழல் நீடிக்கிறது. எனினும் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்கிறது’ என்று பிரதமரின் முதன்மைச் செயலாளர் பி.கே.மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
மத்திய நிதித் துறை சார்பில் பொருளாதார மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில் 30 நாடுகளைச் சேர்ந்த 180 பொருளாதார நிபுணர்கள் பங்கேற்றனர். சர்வதேச வர்த்தகம் குறித்து மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் பிரதமரின் முதன்மைச் செயலாளர் பி.கே.மிஸ்ரா பேசியதாவது:
கரோனா பெருந்தொற்று காலத்தில் உலக நாடுகள் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டன. இதன் பிறகு சர்வதேச அளவில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்து வருகின்றன. இதன் காரணமாக உலகம் முழுவதும் ஸ்திரமற்ற, நிச்சயமற்ற சூழல் நீடிக்கிறது. எனினும் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது.
நடப்பாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதமாக உள்ளது. இதன்மூலம் கணிப்புகளை தாண்டி இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நாட்டின் மின் விநியோகம், எரிசக்தி விநியோகம் சீராக உள்ளது. வாகன விற்பனை கணிசமாக அதிகரித்து வருகிறது.
இந்தியாவின் விநியோக சங்கிலியை விரிவுபடுத்தி உள்ளோம். பல்வேறு நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டு உள்ளோம். நாட்டின் உற்பத்தித் திறனை அதிகரித்து உள்ளோம். இத்தகைய நடவடிக்கைகளால் இந்தியப் பொருளாதாரம் வலுவாக இருக்கிறது.
போர்கள், வர்த்தக போருக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அப்போதுதான் உலக பொருளாதாரம் மீண்டெழும். இவ்வாறு பி.கே.மிஸ்ரா பேசினார்.