இந்திய அரசியலமைப்பு நாள் - முதல்வர் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

இந்திய அரசியலமைப்பு நாள் - முதல்வர் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
Updated on: 
2 min read

சென்னை: இந்திய அரசியலமைப்பு நாளை முன்னிட்டு முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இந்திய அரசியலமைப்புச் சட்டம், 1949-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் நாள் ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவுகூரும் இந்திய அரசியலமைப்பு நாளான இந்நாளில், இச்சட்டத்தை உருவாக்கியதில் அரும்பங்காற்றிய தலைவர்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து போற்றுகிறேன்.

அரசியலமைப்பின் விழுமியங்களை நிலைநிறுத்தி, வளம்மிக்க தமிழ்நாட்டையும், ஆற்றல்மிகு இந்தியாவையும் உருவாக்க இந்நாளில் உறுதியேற்போம்! ஜனநாயகமும், சகோதரத்துவமும், சமூக நீதியும் தழைத்தோங்கட்டும்! என தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியில், 1949-ஆம் ஆண்டு இதே நாளில்தான், பல நூற்றாண்டுகளாகச் சமூக ஏற்றத்தாழ்வுகள் நிறைந்திருந்த இந்தியாவில், சமத்துவத்தை உறுதிசெய்து சமூகநீதிக்கு அடித்தளமிட்ட முற்போக்கான அரசியலமைப்புச் சட்டத்தை நாம் ஏற்றுக்கொண்டோம்.

காலந்தோறும் மாறிவரும் சமூகத்தின் தேவைகளுக்கும் விருப்பங்களுக்கும் ஏற்ப பரிணமிக்கும் உயிரோட்டமுள்ள ஆவணமாகவே நமது அரசியலமைப்புச் சட்டத்தை அம்பேத்கர் உருவாக்கினார்.

குடியரசாக நமது பயணத்தில், 75 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், இந்தியாவை உண்மையான கூட்டாட்சி நாடாக மாற்றிட அரசியலமைப்புச் சட்டத்தை விரிவான மறுஆய்வுக்கு உட்படுத்துவது இன்றியமையாதது. இந்த நோக்கத்துடன்தான் உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில் ஒன்றிய – மாநில உறவுகள் குறித்த உயர்மட்டக் குழுவை நமது திராவிட மாடல் அரசு அமைத்தது.

தற்போதைய ஆட்சியாளர்கள் அக்குழுவைக் கலைத்திருந்தாலும், மாநில சுயாட்சிக்காகவும் உண்மையான கூட்டாட்சியை நிலைநாட்டுவதற்காகவும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் போராட்டம் தொடரும்!

இந்த அரசியலமைப்புச் சட்ட நாளில், நமது அரசியலமைப்புச் சட்டத்தின் முற்போக்கான விழுமியங்களைப் பாதுகாக்கவும், அதன் கூட்டாட்சித் தன்மையை மேலும் வலுப்படுத்தவும் உறுதியேற்போம்!” என தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இந்திய ஜனநாயகத்தின் அடித்தளமாகவும், நமது நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தின் அடையாளமாகவும் திகழும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நவம்பர் 26ஆம் நாளை, இந்திய அரசியலமைப்பு தினமாகக் கொண்டாடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா தலைநிமிர்ந்து நிற்பதற்கும், ஒவ்வொரு குடிமகனின் உரிமைகளையும் கடமைகளையும் உறுதிப்படுத்துவதற்கும் வழிகாட்டும் நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் அளப்பரிய பங்காற்றிய சட்டமேதை அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள் அனைவரையும் இந்நன்னாளில் நன்றியுடன் நினைவுகூர்வோம்.

அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்பையும், ஜனநாயக விழுமியங்களையும் போற்றிப் பாதுகாத்து, வலிமையான, வளர்ச்சியடைந்த, ஒற்றுமைமிக்க பாரதத்தை உருவாக்கிட நாம் அனைவரும் உறுதியேற்போம்.

அனைவருக்கும் எனது இனிய இந்திய அரசியலமைப்பு தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்! என தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இந்திய ஜனநாயகத்தின் அடித்தளமாகவும், நமது நாட்டின் ஒற்றுமை, சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் சமூகநீதியின் வழிகாட்டியாகவும் திகழும் இந்திய அரசியலமைப்புச் சட்டம், அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் இன்று.

ஒவ்வொரு குடிமகனுக்கும் சம உரிமையையும், சுதந்திரத்தையும், கண்ணியத்தையும் உறுதிசெய்யும் உன்னதமான ஆவணத்தை உருவாக்கிய குழுவில் இடம்பெற்றிருந்த அம்பேத்கர் உள்ளிட்ட அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்கள் அனைவருக்கும் இந்நாளில் மரியாதை செலுத்துவதோடு, அரசியலமைப்பின் மாண்பையும், ஜனநாயக விழுமியங்களையும் பாதுகாத்திட நாம் அனைவரும் உறுதியேற்போம். என தெரிவித்துள்ளார்.

இந்திய அரசியலமைப்பு நாள் - முதல்வர் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி ஆளுநரிடம் உதயநிதி மனு

X