ஞானேஷ் குமாருக்கு எதிரான ‘பொது கண்டன விசாரணை’ ஒத்திவைப்பு: ராகுல் தகவல்

ஞானேஷ் குமாருக்கு எதிரான ‘பொது கண்டன விசாரணை’ ஒத்திவைப்பு: ராகுல் தகவல்
Updated on: 
1 min read

புதுடெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக இன்று நடைபெற இருந்த ‘பொது கண்டன விசாரணை’ நிகழ்வு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக இண்டியா கூட்டணி சார்பில் டெல்லியில் இன்று நடைபெற இருந்த பொது கண்டன விசாரணை ('public impeachment') நிகழ்வு மழை காரணமாக நாளைய தினத்துக்கு (அக்.31) ஒத்திவைக்கப்படுகிறது.

டெல்லியில் தற்போது நிலவும் வானிலை, மூத்த தலைவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் அனைவரின் ஒருமித்த கருத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

பொது கண்டன விசாரணை நிகழ்வு டெல்லயில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் இல்லத்தில் நடைபெறுவதாக இருந்தது. டெல்லியில் பெய்த மழை காரணமாக, புல்வெளி சேறும் சகதியுமாக மாறியுள்ளதாலும், வானிலையைக் கருத்தில் கொண்டும் இந்த நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பொது கண்டன விசாரணை நிகழ்வில் மக்களவை முன்னாள் சபாநாயகர் மீரா குமார் தலைமை வகிக்கவும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே 'தீர்மானத்தை' முன்மொழியவும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நிறைவுரையாற்றவும் திட்டமிடப்பட்டிருந்தது.

மேலும், இண்டியா கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியிலிருந்தும் தலா ஒருவர் இந்த நிகழ்வில் பேசுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, நவ.1-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள பேரணியில் மக்கள் கலந்து கொள்வதைத் தடுக்க உள்துறை அமைச்சர் அமித் ஷா தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டினார்.

“டெல்லியில் நடைபெற உள்ள நவ.1 பேரணியில் கலந்து கொள்ளுமாறு அனைவரையும் அழைக்கிறேன். உத்தரப் பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இருந்து பேரணியில் பங்கேற்க டெல்லி வர விரும்புபவர்களை தடுக்க அமித் ஷா தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். எனினும், என்ன நடக்கப் போகிறது என்பதை ராம் லீலா மைதானத்தில் பாருங்கள்.

ஏராளமான மக்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால், பெரும் கோபமும் உணர்வுப்பூர்வமான வலியும் அவர்கள் மத்தியில் நிலவுகிறது. நவ.1 அன்று ராம்லீலா மைதானத்தில் நடைபெற உள்ள பேரணி, ஒற்றைப் போராட்டமாகவே திட்டமிடப்பட்டுள்ளது. போராட்டத்தில் பங்கேற்க விரும்பும் எவரும் இதில் கலந்து கொள்ளலாம்” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஞானேஷ் குமாருக்கு எதிரான ‘பொது கண்டன விசாரணை’ ஒத்திவைப்பு: ராகுல் தகவல்
அன்பில் மகேஸை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரிய மனு மீதான உத்தரவு நவ.2-க்கு தள்ளிவைப்பு

X