

புதுடெல்லி: வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, அணுசக்தி, அடிப்படைக் கட்டமைப்பு வசதி ஆகிய 5 துறைகளில் இந்தியா, சுவிட்சர்லாந்து இடையே நேற்று 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
சுவிட்சர்லாந்து நாட்டின் பிரதமர் கய் பார்மெலின் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு நேற்று வருகை தந்தார். நடப்பாண்டில் இந்தியாவுக்கு அவர் மேற்கொள்ளும் 2-வது பயணம் இதுவாகும். முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் இந்தியா வந்திருந்தார்.
இந்நிலையில், நேற்று வந்த அதிபர் கய் பார்மெலினுக்கு விமான நிலையத்தில் அரசு முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதன் பின்னர் டெல்லியில் மகாத்மா காந்தி நினைவிடம் அமைந்துள்ள ராஜ்காட்டுக்கு சென்றார். அங்கு காந்தி நினைவிடத்தில் அவர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். முன்னதாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சுவிட்சர்லாந்து அதிபர் பார்மெலினை சந்தித்து இருதரப்பு உறவுகளின் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்தார்.
இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை, அதிபர் கய் பார்மெலின், ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் வர்த்தகம், முதலீடு ஆகியவை தொடர்பாக இரு நாட்டு உறவுகளை மேம்படுத்தவும், அடுத்த நிலைக்கு அவற்றை எடுத்துச் செல்லவும் இருவரும் உறுதி பூண்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
பின்னர் அதிபர் கய் பார்மெலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இரு நாடுகளும் தங்கள் உறவுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்த இந்தப் பயணம் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்தியா- சுவிட்சர்லாந்து இடையிலான உறவுகள் ‘பகிர்ந்து கொள்ளப்பட்ட ஜனநாயக விழுமியங்கள் மற்றும் நம்பிக்கை, பரஸ்பர மரியாதை’ ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி, அதிபர் கய் பார்மெலின் முன்னிலையில் வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, அணுசக்தி, அடிப்படைக் கட்டமைப்பு வசதி ஆகிய 5 துறைகளில் இந்தியா, சுவிட்சர்லாந்து இடையே நேற்று 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இளம் தொழில் வல்லுநர்களுக்கான பரிமாற்றத் திட்டம், போக்குவரத்து தொழில்நுட்பங்கள், போக்குவரத்து அமைப்புகள், உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றில் 2 நாடுகளும் ஒத்துழைப்பை ஊக்குவிக்குவிப்பதற்காக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிஉள்ளன.