

பெங்களூரு: கர்நாடக மாநிலம் துமக்கூரு மாவட்டத்தில் உள்ள குனிகல் தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ ரங்கநாத் பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: "கர்நாடகாவில் மண்டியா, துமக்கூரு, ஹாசன், ஷிமோகா உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள ஆண்களை திருமணம் செய்துகொள்ள பெண்கள் யாரும் முன்வருவதில்லை.
இதனால் 35 வயதை கடந்த போதும், ஆண்கள் திருமணம் செய்யாமல் தனித்து வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் விவசாயிகள் மணப் பெண்களை தேடி கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களுக்கு செல்கின்றனர். மொழி காரணமாக அங்கும் அவர்களுக்கு பெண்கள் கிடைப்பதில்லை. இதனால் ஆண்டுதோறும் மலை மாதேஷ்வரன் கோயிலுக்கு ஆயிரக்கணக்கானோர் நடந்து சென்று, நேர்த்திக் கடன் செலுத்தி வருகின்றனர்.
எனது தொகுதியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் 30 வயதை கடந்து திருமணம் ஆகாமல் இருக்கின்றனர். அவர்களை திருமணம் செய்துகொள்ள முன்வரும் பெண்களுக்கு விவசாய அமைப்புகளே இலவசமாக திருமணம் செய்து வைக்க தயாராக இருக்கின்றன. இருப்பினும் பெண்கள் பெங்களூருவில் உள்ள மணமகன்களையே விரும்புகின்றனர்.
ஆண்களின் இந்த அவல நிலையை கருத்தில் கொண்டு கர்நாடக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து முதல்வர் சித்தராமையாவுக்கு கோரிக்கை மனு அடங்கிய கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளேன். அந்த கடிதத்தில் விவசாயிகளை திருமணம் செய்துகொள்ளும் பெண்களுக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும். தங்க தாலி, சீர்வரிசை பொருட்கள் ஆகியவற்றை அரசே வழங்க வேண்டும்.
விவசாயக் குடும்பங்களின் சமூக, பொருளாதார நிலையை மேம்படுத்த அவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இதனை வருகிற பட்ஜெட் கூட்டத்திலே அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.