

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த விவாதத்தின்போது, விதிகளை ராகுல் காந்தி மீறியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இவரது நடவடிக்கை மீது நாடாளுமன்ற விதிகளின்படி சபாநாயகர் ஓம் பிர்லா நடவடிக்கை எடுத்தால், ராகுலின் எம்பி பதவி பறிபோகும் எனக் கருதப்படுகிறது.
இது குறித்து நாடாளுமன்ற அலுவலக வட்டாரம் கூறுகையில், ‘மக்களவை எம்.பி. தனது பேச்சில் ஒரு புத்தகம், செய்தித்தாள் அல்லது கடிதத்தில் இருந்து மேற்கோள் காட்டுவது, அவையின் நடவடிக்கைகளுக்குத் தொடர்புடையதாக இருந்தாலன்றி, தடை செய்யப்பட்டுள்ளது. இதை மக்களவை விதி 349(I) குறிப்பிடுகிறது.
எனவே அவ்வாறு செய்வதற்கு முன்பு சில விதிகளை அந்த எம்.பி. பின்பற்றுவது மிகவும் முக்கியம். இந்த விதியின்படி அந்த எம்பி, தனது உரைக்கு முன்பாக சபாநாயகரின் அனுமதி பெற வேண்டும். ஏனெனில், இந்த விதியை மீறும் எம்.பி. தனது பதவியை இழக்க நேரிடும்” என்று தெரிவிக்கின்றனர்.
சபாநாயகரின் அனுமதி பெறாதது மட்டுமின்றி, ராகுல் காந்தி குறிப்பிட்ட நூலானது இன்னும் வெளியிடப்படவில்லை. ராகுலின் இந்த நடவடிக்கை நாடாளுமன்றக் குழுவின் விசாரணைக்கு உகந்ததாக கருதப்படுகிறது. எனவே, ராகுலின் சீனா பேச்சு மீது நடவடிக்கை எடுப்பது குறித்து சபாநாயகர் தனது சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை செய்து வருவதாகவும் தெரிகிறது.
மேலும், இதுபோன்ற தகவல்களை சரி பார்க்குமாறு ஆளும் கட்சி உறுப்பினர்கள் கோரலாம். இதன் அடிப்படையில் அந்த விவகாரம் நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட வாய்ப்புள்ளது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட உறுப்பினர் தனது எம்.பி. பதவியை இழக்க நேரிடும் எனவும் கருத்துகள் எழுந்துள்ளன.