

புதுடெல்லி: இந்திய நிறுவனங்களுடன் இணைந்து தற்கொலைப்படை ட்ரோன்களை உள்நாட்டிலேயே தயாரிக்க இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளது.
தற்கொலைப்படை (காமிகாஸ்) ட்ரோன்களை இந்திய நிறுவனங்களுடன் இணைந்து தயாரிக்க இந்திய விமானப்படை (ஐஏஎப்) திட்டமிட்டுள்ளது. இதற்கான டெண்டரை ஐஏஎப் வெளியிட்டுள்ளது. நிலையான இறக்கைகள் கொண்ட, ஒருமுறை மட்டுமே தாக்கக்கூடிய ஆளில்லா வான்வழி அமைப்புகள்தான் (OWA-UAS) தற்கொலைப்படை ட்ரோன்கள் என்று அழைக்கப்படுகின்றன.
இந்தத் திட்டத்தை கோயம்புத்தூர் மாவட்டம் சூலூரில் உள்ள விமானப்படையின் 5-வது பேஸ் ரிப்பேர் டெப்போ (பிஆர்டி) ஒருங்கிணைக்கும். இதுவே இதற்கான முதன்மை முகமையாக செயல்படும். ஆயுதப் படைகள் தங்களுடைய தேவைகளை வரையறுத்து, அதற்கு ஏற்ப தொழில் துறையினர் தயாரிப்பை உருவாக்கும் வழக்கமான கொள்முதல் திட்டங்களைப் போலல்லாமல், இந்த வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டுச் செயல்பாட்டில் ஐஏஎப் நேரடியாகப் பங்கெடுக்கும்.
இந்த நடவடிக்கை, மாறிவரும் செயல்பாட்டுத் தேவைகளுக்கு ஏற்ப இந்தத் தளத்தை மாற்றிமைப்பதில் விமானப்படைக்கு கூடுதல் நெகிழ்வுத்தன்மையை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்நுட்பத் தேவைகளின்படி, இந்த ட்ரோன் 16,000 அடி உயரம் வரை பறந்து செயல்படும் திறன் கொண்டதாகவும், பகல் மற்றும் இரவு ஆகிய இரு வேளைகளிலும் இயங்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். மேலும், குறைந்தபட்சம் 30 கிலோ எடையைச் சுமந்து செல்லும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும்.
மேலும், இத்திட்டம் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டு, தயாரிக்கப்பட வேண்டும் என்றும், உள்நாட்டு உதிரிபாகங்கள் மற்றும் அமைப்புகளுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் இந்திய விமானப்படை கட்டாயமாக்கியுள்ளது.