‘அவைக்கு வர வேண்டாம் என பிரதமரை நான் கேட்டுக் கொண்டது ஏன்?’ - சபாநாயகர் ஓம் பிர்லா விவரிப்பு

மோடியின் இருக்கையை காங். பெண் எம்.பி.க்கள் சுற்றி வளைத்ததாக தகவல்
‘அவைக்கு வர வேண்டாம் என பிரதமரை நான் கேட்டுக் கொண்டது ஏன்?’ - சபாநாயகர் ஓம் பிர்லா விவரிப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்ற திட்டமிட்டிருந்த நிலையில், அவர் அவைக்கு வந்தால் அசம்பாவிதம் நிகழக்கூடும் என்பதால், அவரிடம் வர வேண்டாம் என தான் கேட்டுக்கொண்டதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் நேற்று உரையாற்ற இருந்த நிலையில், அதற்கு முன்பாக அவையில் ஏற்பட்ட அமளி காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து குறிப்பிட்டுப் பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, ‘‘மக்களவையில் சில எம்பிக்கள் முறையற்ற முறையில் நடந்து கொண்டனர்.

குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உரை நிகழ்த்த பிரதமர் மோடி மக்களவைக்கு வருவதாக இருந்தார். அவர் வருவதற்கு முன்பாக, காங்கிரஸ் பெண் எம்பிக்கள் பிரதமர் இருக்கையைச் சுற்றி வளைத்திருந்தனர்.

பிரதமரின் உரையின்போது, காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி எம்பிக்கள் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்யலாம் என்று எனக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்தது. வரலாற்று ரீதியாக, அரசியல் கருத்து வேறுபாடுகள் நாடாளுமன்ற அவைக்குள் கொண்டுவரப்பட்டதில்லை. ஆனால், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சில எம்பிக்கள், பிரதமரின் இருக்கைக்குச் சென்று எதிர்பாராத ஒரு சம்பவத்தை நிகழ்த்தக்கூடும் என எனக்கு நம்பகமான தகவல் கிடைத்தது.

அப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் அது தேசத்தின் கண்ணியத்துக்கு கடும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கும். அதனால்தான், நடாளுமன்றத்துக்கு வர வேண்டாம் என பிரதமரை நான் கேட்டுக்கொண்டேன். நேற்று நடந்தது நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு கரும்புள்ளி’’ என ஓம் பிர்லா தெரிவித்தார்.

மக்களவையில் புதன்கிழமை என்ன நடந்தது?

மக்களவையில் பாஜக எம்பி பி.பி. சவுத்ரி பேசிக்கொண்டிருந்தபோது, அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம் மற்றும் ஓய்வுபெற்ற ராணுவத் தளபதி நரவனேவின் வெளியிடப்படாத புத்தகத்தில் உள்ள கருத்துக்கள் ஆகியவற்றை முன்வைத்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் அவையின் மையப் பகுதிக்குச் சென்றனர். போராட்டம் தீவிரமடைந்ததால் பிரதமரின் உரை இல்லாமலேயே அவையை சபாநாயகர் ஒத்திவைத்தார்.

‘அவைக்கு வர வேண்டாம் என பிரதமரை நான் கேட்டுக் கொண்டது ஏன்?’ - சபாநாயகர் ஓம் பிர்லா விவரிப்பு
இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்த கூட்டறிக்கை 5 நாட்களில் வெளியாகலாம்: பியூஷ் கோயல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in