

நிதிஷ் குமார்
புதுடெல்லி: கடந்த 2005 முதல் 20 வருடங்களாக 10 முறை பிஹார் முதல்வராக தொடர்பவர் நிதிஷ் குமார். ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) தலைவரான அவர் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாக உள்ளார்.
நிதிஷ் குமாருக்கு நெருக்கமான அதிகாரிகளின் கூற்றுப்படி, நிதிஷின் ராஜினாமா முடிவுக்கு பல அடிப்படை காரணங்கள் இருப்பதாக தெரிகிறது. வயது மூப்பால் அவரது உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு இந்த முடிவுக்கு முக்கிய காரணமாகி விட்டது. கடந்த வருடம் தேர்தல் பிரச்சாரத்தில் சிலசமயம் தான் எதற்காக அங்கு வந்தோம் என்பதே முதல்வர் நிதிஷ் மறந்துவிட்ட நிலையும் ஏற்பட்டுள்ளது.
மாநிலத்தில் கூட்டணி ஆட்சியை நடத்த வேண்டிய நிலை உள்ளது. இந்த சூழ்நிலையில், நிதிஷ் குமார் தனது உடல்நிலையின் உண்மை நிலையை ஒரு கட்டத்தில் உணர்ந்து முதல்வர் பதவியிலிருந்து விலகத் தருணம் பார்த்துள்ளார். இறுதியில் கவுரமாக பதவி விலக அவருக்கு மாநிலங்களவை தேர்தல் சாதகமாகி விட்டது.
நிதிஷுடன் அரசியலில் நுழைந்த அவரது சகாக்களான ராஷ்டிரிய ஜனதா தளத்தின் லாலுவும், பாஜகவின் மறைந்த பிஹார் துணை முதல்வர் சுசில் குமார் மோடியும் மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளனர்.
எனவே தானும் அப்பதவி வகிக்க விரும்புவதாக பொதுமேடைகளிலும் நிதிஷ் வெளிப்படுத்தி உள்ளார். இதனால் இந்த முடிவை எடுத்ததன் மூலம் நிதிஷ் தன் அரசியல் வாழ்வைக் காப்பாற்றிக் கொண்டார் என்றே கருதப்படுகிறது.
பிஹாரில் அதிகார மாற்றத்துக்கான திட்டத்தை தயாரிக்க நிதிஷ் குமாருக்கு பாஜக உதவியது. இதற்காக அவர், பாஜக தலைமையுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார். இதில் முடிவான திட்டத்தின்படி, நிதிஷ்குமாரின் பதவி விலகல் பிஹாரில் அதிர்வை கிளப்பும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த உணர்வுகளை மதிக்கும் வகையில் அவரது மகன் நிஷாந்த் குமாரை அரசியலில் இறக்க நிதிஷ் சம்மதித்துள்ளார். மகன் நிஷாந்தை ஜேடியு உறுப்பினராக்கிய பிறகு சட்டப்பேரவை அல்லது சட்டமேலவையில் அமர வைப்பது என உடன்பாடு ஏற்பட்டுள்ளது. முதல்வர் மாற்றத்தில் ஜேடியு சார்பில் 2 துணை முதல்வர்கள் அமர்த்தப்படுவார்கள். இவர்களில் ஒருவராக நிஷாந்த் குமார் இருப்பார்.
பாஜக யாரை முதல்வராக்கினாலும் அதற்கு நிதிஷ் குமாரின் ஒப்புதல் அவசியமாக்கப்பட்டு உள்ளது. எனினும், பிஹாரில் இனி பாஜகதான் மூத்த சகோதர் பங்கு வகிக்கும்.
இதனிடையே, மாநிலங்களவை தேர்தல் முடிவுகளுக்கு பிறகு நிதிஷ்குமார் டெல்லிக்கு குடிபெயரும் எண்ணத்தில் இல்லை எனத் தெரிகிறது. பாட்னாவில் தற்போது அவர் தங்கியுள்ள அரசு குடியிருப்பிலேயே தொடர்வார். பிஹார் அரசியலிலும் தொடர்ந்து பங்கெடுப்பார். நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது மட்டுமே அவர் டெல்லிக்குச் சென்று வருவார். மேலும், உடல்நலக் குறைவு காரணமாக அவையில் இருந்து நீண்ட விடுப்பு எடுக்கவும் வாய்ப்பு உள்ளது.
பாட்னாவில் தங்கியபடி நிதிஷ் தன் மகனுக்கு அரசியலின் நுணுக்கங்களை கற்பிக்க விரும்புவதாக கருதப்படுகிறது. துணை முதல்வராகும் மகன் நிஷாந்தின் கடமைகளுக்கு அவரைத் தந்தை தயார்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும், நிதிஷின் உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்களினால் அவர் எவ்வளவு காலம் மகனுக்கு உதவ முடியும் என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.