

குவாஹாட்டி: அசாம் மாநில முதல்வராக 2-வது முறையாக ஹிமந்த பிஸ்வா சர்மா நாளை பதவியேற்க உள்ளார்.
அசாம் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் (என்டிஏ) கூட்டணி, மொத்தம் உள்ள 126-ல் 102 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. இதன் மூலம் இக்கூட்டணி தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியைப் பிடித்தது. இந்நிலையில், குவாஹாட்டியில் என்டிஏ எம்எல்ஏ-க்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஹிமந்த பிஸ்வா சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, ஆளுநர் லட்சுமண் பிரசாத் ஆச்சார்யாவை சந்தித்த ஹிமந்த பிஸ்வா சர்மா, ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதை ஏற்றுக் கொண்ட ஆளுநர் ஆட்சி அமைக்குமாறு அழைப்பு விடுத்தார்.
இதன் மூலம் சர்மா 2-வது முறையாக முதல்வராக நாளை பதவியேற்க உள்ளார். என்டிஏ எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா, ஹிமந்த பிஸ்வா சர்மாவின் பெயரை 8 பாஜக எம்.எல்.ஏ-க்கள் முன்மொழிந்ததாகத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: பாஜக மற்றும் என்டிஏ சட்டப்பேரவைக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஹிமந்த பிஸ்வா சர்மாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். வளர்ச்சி, ஸ்திரத்தன்மை மற்றும் பொது நலனுக்காக அசாம் மக்கள் மூன்றாவது முறையாகத் தொடர்ந்து ஆசி வழங்கியுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், இந்த ‘இரட்டை எஞ்சின்' அரசு ‘வளர்ச்சியடைந்த அசாம்' மற்றும் ‘வளர்ச்சியடைந்த பாரதம்' என்ற இலக்கை அடைய முக்கியப் பங்காற்றும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.