

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தின் வாராணசி மக்களவை தொகுதி உறுப்பினராக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். அங்கு மாநகராட்சி சார்பில் 350 ஏக்கர் நிலப்பரப்பில் ‘நமோ வனம்’ என்ற பெயரில் ஒரு நகர்ப்புறக் காடு உருவக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு மணி நேரத்துக்குள் 2,51,446 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு புதிய கின்னஸ் உலக சாதனை படைக்கபப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு சீனாவில் ஒரு மணி நேரத்தில் 1,53,981 மரக் கன்றுகள் நடப்பட்டதுதான் உலக சாதனையாக இருந்தது. இந்த சாதனை இப்போது முறியடிக்கப்பட்டுள்ளது. கங்கை நதித் தொடர்ச்சி மலைகளுக்கு அருகில் சுஜாபாத் டோம்ரி பகுதியில் அமைந்துள்ள நமோ வனத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுநல அமைப்பினர் உள்ளிட்ட சுமார் 20,000 பொதுமக்கள் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனர்.
நமோ வனம் திட்டத்தின் கீழ் மொத்தம் 3,00,000 மரக்கன்றுகள் நடப்படுகின்றன. இதில் 2,50,000 மியாவாகி இன மரங்கள், 10,000 பலகைகளுக்கான மரங்கள் மற்றும் 40,000 பழ மரங்கள் அடங்கும். இத்துடன் நமோ வனம் திட்டத்தில் நான்கு கிலோ மீட்டர் நீளத்தில் சிறப்பு நடைபாதை அமைக்கப்படுகிறது. இதில், தியானம் மற்றும் யோகா பயிற்சி செய்வதற்கான வசதியும் உருவாக்கப்படுகிறது.
அத்துடன், குழந்தைகள் விளையாட்டு பகுதி மற்றும் திறந்தவெளி உடற் பயிற்சிக்கான பகுதியும் உருவக்கப்படுகிறது. இந்தப் பாதையின் இருபுறமும் நான்கு ஹெக்டேர் மலர் பூங்கா, இரண்டு ஹெக்டேர் மூலிகை பூங்கா இடம்பெறுகிறது. வரும் காலத்தில் ஒரு இயற்கை மருத்துவ தோட்டம் நிறுவவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நமோ வனம், பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்துதல், கங்கை நதிக்கரைகளை வலுப்படுத்துதல், சுற்றுச்சூழல் சமநிலை பாதுகாத்தலில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கும்.