

புதுடெல்லி: டிஜிட்டல் மோசடிகளில் தொடர்புடைய வங்கிக் கணக்குகளைக் கையாள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை 4 வாரங்களுக்குள் வகுக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக் ஷி, வி.மோகனா அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: போலி வங்கி கணக்குகள், பண மோசடி மற்றும் இணையவழி மோசடிகளுடன் தொடர்புடைய வங்கி கணக்குகளைக் கையாள்வதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறையை நான்கு வாரங்களுக்குள் ரிசர்வ் வங்கி தயாரித்து வழங்க வேண்டும்.
டிஜிட்டல் கைது முறைகேடு விவகாரத்தில் குறைதீர்ப்பு, பண மீட்பு நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை அனைத்து மாநில அரசுகளும், விசாரணை அமைப்புகளும், சட்ட அமலாக்க முகமைகளும் மேற்கொள்ள வேண்டும். டிஜிட்டல் மோசடி குறித்து புகார் அளிக்க பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
அனைத்து மாநில அரசுகளும் சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையங்களை அமைக்க வேண்டும். இ-ஜீரோ எப்.ஐ.ஆர் வழிமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். டிஜிட்டல் மோசடி தொடர்பான வங்கிக் கணக்குகளை விரைந்து முடக்க வேண்டும். மோசடி செய்யப்பட்ட பணத்தை விரைந்து மீட்க வேண்டும். வங்கி கணக்கு முடக்க வழக்குகளின் விசாரணையை எளிதாக்க வேண்டும்.
டிஜிட்டல் கைது மோசடியால் பாதிக்கப்பட்டோர் இழப்பீடு பெறுவதற்கான கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். டிஜிட்டல் கைது மோசடிகள் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொள்ள வரையறுக்கப்பட்டுள்ள ரூ.10 கோடி என்ற வரம்பைக் குறைக்க வேண்டும். டிஜிட்டல் மோசடி தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து செப். 16-க்குள் அனைத்து மாநில அரசுகள், மத்திய அரசு, சிபிஐ அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.