

சென்னை நீலாங்கரை இல்லத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்த போலீஸார், அவரை வாகனத்தில் ஏற்றி தஞ்சைக்கு அழைத்து சென்றனர். அப்போது தொண்டர்களைப் பார்த்து கையசைத்த உதயநிதி. படம்: எல்.சீனிவாசன்.
சென்னை/தஞ்சாவூர்: தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் ஆபாசமாகப் பேசியதாகக் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். அவரை தஞ்சாவூர் அழைத்து சென்று விசாரணை நடத்திய போலீஸார், இரவு விடுவித்தனர்.
காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாகத் தஞ்சாவூரில் நேற்றுமுன்தினம் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது, பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இரட்டை அர்த்தத்தில் கருத்து தெரிவித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாகத் தவெக மகளிரணி சார்பில், தஞ்சாவூர் டவுன் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், 9 பிரிவுகளின் கீழ் உதயநிதிக்கு எதிராகப் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, தஞ்சாவூர் போலீஸார் நேற்று காலை 7 மணியளவில் சென்னை போலீஸாரின் உதவியுடன் நீலாங்கரையில் உள்ள உதயநிதி ஸ்டாலின் இல்லத்துக்குச் சென்றனர். வீட்டைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டது.
போலீஸார் வீட்டுக்குள் சென்று வழக்கு தொடர்பான ஆவணங்களை வழங்கி, கைது செய்வதாகத் தெரிவித்தனர். அப்போது உதயநிதியின் மனைவி கிருத்திகா மற்றும் முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர், “வழக்கறிஞர்கள் வர உள்ளனர். அதுவரை காத்திருங்கள்” என்று கேட்டுக் கொண்டனர்.
ஆனால், போலீஸார் கைது நடவடிக்கை தொடரும் என்று தெரிவித்தனர். இதற்கிடையில், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தொழிலதிபர் சபரீசன் (மு.க.ஸ்டாலின் மருமகன்), கட்சியின் சட்டத் துறை நிர்வாகிகள் உட்பட பலர் உதயநிதி இல்லத்துக்கு விரைந்து வந்தனர்.
தொண்டர்கள் அதிக எண்ணிக்கையில் திரண்டதால், போலீஸார் இரும்பு தடுப்புகளை அமைத்து பாதுகாப்பைப் பலப்படுத்தினர். எனினும், திமுகவினர் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சாலை மறியல் செய்தனர். நீண்ட நேர பரபரப்புக்குப் பிறகு, காலை 10.30 மணிக்கு மேல் போலீஸார் உதயநிதி ஸ்டாலினைக் கைது செய்து வேனில் ஏற்றினர்.
உதயநிதியை அழைத்துச் சென்ற போலீஸ் வாகனத்தைத் தடுத்து நிறுத்திய திமுகவினர், அரசுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர். சிலர் போலீஸ் தடுப்புகளைத் தூக்கி வீசியதுடன், வாகனத்தின் முன்பாக சாலையில் படுத்து மறியல் செய்தனர். இதனால் போலீஸாருக்கும் திமுகவினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த பரபரப்பில் 3 பேருக்கு காயம் ஏற்பட்டது.
பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் சுமார் 2,000 பேரை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர். இதனால் பதற்றம் ஏற்பட்டது. இதேபோல், உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து தவெகவினர் வடக்கு கடற்கரை மற்றும் பரங்கிமலை பகுதியில் போராட்டம் நடத்தினர்.
தவெக எம்எல்ஏக்கள் பல்லவி மற்றும் தாமு தலைமையில் 100-க்கும் மேற்பட்ட தவெகவினர் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
பின்னர் பலத்த பாதுகாப்புடன் உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூர் அழைத்துச் செல்லப்பட்டார். மாலை 6.30 மணியளவில் திருச்சி வழியாக உதயநிதியை போலீஸார் தஞ்சாவூர் அழைத்து வந்தனர். ஆனால், திடீரென செங்கிப்பட்டி காவல் நிலையத்துக்கு உதயநிதியை அழைத்துச் சென்றனர்.
அங்கு, தனது வழக்கறிஞர்கள் வந்தால்தான் காவல் நிலையத்துக்குள் வருவேன் என்று கூறிய உதயநிதி வாகனத்தை விட்டு இறங்காமல் சுமார் அரை மணி நேரம் காத்திருந்தார். திமுக வழக்கறிஞர்கள் அங்கு வந்த பிறகு, வாகனத்தில் இருந்து உதயநிதி இறங்கி காவல் நிலையத்துக்குள் சென்றார்.
அங்கு தஞ்சாவூர் எஸ்.பி. சுந்தரவதனம் முன்னிலையில், தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் மணிகண்டன் விசாரணை நடத்தினார். அப்போது, போலீஸாரின் கேள்விகளுக்கு உதயநிதி பதிலளித்தார். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு 8.15 மணியளவில் உதயநிதியைப் போலீஸார் விடுவித்தனர்.
முன்னதாக நேற்று காலை 10.30 மணியளவில் உதயநிதி ஸ்டாலினுக்கு முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீது விசாரணை நடந்த போது, “தஞ்சாவூரில் காவல் நிலைய விசாரணைக்குப் பிறகு அவர் விடுவிக்கப்படுவார். நீதிமன்ற காவலுக்கு அனுப்புவது எங்கள் நோக்கமல்ல” என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.
அதைப் பதிவு செய்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், “உதயநிதியை விசாரணை முடிந்ததும் போலீஸார் இன்றே (நேற்று) விடுவிக்க வேண்டும். உதயநிதி ஸ்டாலினும் போலீஸாரின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.