

லக்னோ: உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப் பேரவை தேர்தலை முன்னிட்டு, அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) மற்றும் சந்திரசேகர் ஆசாத்தின் ஆசாத் சமாஜ் கட்சி (கான்ஷிராம்) ஆகியவை இணைந்து ‘சமூக பரிவர்த்தன் மோர்ச்சா' என்கிற புதிய கூட்டணியை அமைந்துள்ளன.
தேர்தல் பணிகளுக்காக ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசி அடிக்கடி உத்தர பிரதேசம் சென்று, சந்திரசேகர் ஆசாத்தை சந்தித்து வருகிறார். அந்த வகையில் நேற்று அவர் உத்தர பிரதேசத்தின் சஹாரன்பூர் நகருக்கு சென்று, சந்திரசேகர் ஆசாத்தை சந்தித்து பேசினார். பின்னர் அவர் சஹாரன்பூர் அரசு விருந்தினர் மாளிகைக்கு புறப்பட்டார்.
இதனிடையே, சஹாரன்பூர் அரசு விருந்தினர் மாளிகைக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிப்பதற்காக, சீருடை அணிந்த போலீஸார் அங்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.
இருப்பினும், நீதிபதி வருவதற்கு முன்பே, ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி காலை 11.30 மணியளவில் தனது வாகன அணிவகுப்புடன் சஹாரன்பூர் அரசினர் விருந்தினர் மாளிகைக்கு வந்து சேர்ந்தார்.
உச்ச நீதிமன்ற நீதிபதி வந்துவிட்டதாக தவறாகக் கருதிய போலீஸார், அசாதுதீன் ஒவைசி தனது வாகனத்திலிருந்து இறங்கியபோது அவருக்கு மரியாதை அணிவகுப்பு நடத்தினர். ஒவைசி அந்த மரியாதையை ஏற்றுக்கொண்டு, விருந்தினர் மாளிகைக்குள் சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவியது.