நீதிமன்ற நடவடிக்கைகளை செல்போனில் வீடியோ எடுக்கத் தடை

நீதிமன்ற நடவடிக்கைகளை செல்போனில் வீடியோ எடுக்கத் தடை
Updated on: 
1 min read

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தின் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் கடந்த 19-ம் தேதி நீதிபதி விக்ரம். டி. சவுகான் முன்பு ஒரு வழக்கின் விசாரணை நடைபெற்றது. அப்போது, வாராணசியைச் சேர்ந்த ராஜ் குல்ஷ்ரேஸ்தா நீதிமன்ற நடவடிக்கைகளை தனது செல்போனில் வீடியோ எடுத்தார். இதைப் பார்த்த நீதிபதி, செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்ய நீதிமன்ற ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.

அதன்படி ஆய்வு செய்தபோது அதில் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பான 3 காணொளிகள் இருந்துள்ளன. இதையடுத்து அந்த நபரை கைது செய்து சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், ராஜ் குல்ஷ்ரேஸ்தா-வை நவம்பர் 20-ம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி நேற்று முன்தினம் அவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர் தனது நடத்தைக்காக நீதிபதி விக்ரம்.டி.சவுகானிடம் மன்னிப்புக் கோரியதையடுத்து, அவர் மீதான விசாரணையைக் கைவிட்டு அவரை விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் நீதிபதி, ''நீதிமன்ற நடவடிக்கைகள் பொழுதுபோக்கு நோக்கங்களுக்கானது அல்ல. நீதிமன்றத்தின் அனுமதியின்றி அதன் நடவடிக்கைகளை வெளியிடுவது அல்லது பதிவு செய்வது, நீதிமன்ற நடவடிக்கைகளில் இறுதித் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பே சமூக ஊடக விசாரணைக்கு ஒப்பான விளைவை ஏற்படுத்தக்கூடும்.

மேலும் அது நீதிமன்ற நடவடிக்கைகளையோ அல்லது வழக்காடுபவரின் உரிமையையோ பாதகமாகப் பாதிக்கலாம். எனவே வழக்குகளில் உள்ள உண்மைகளை, நீதிமன்றத்தின் தீர்ப்பு இல்லாமல் சமூக ஊடகங்களில் வெளியிட வேண்டிய அவசியமில்லை. வழக்காடு பவர்கள் செல்போன்களுடன் நீதிமன்ற அறைகளுக்குள் நுழைய அனுமதிக்கக்கூடாது'' என உத்தரவிட்டார்.

நீதிமன்ற நடவடிக்கைகளை செல்போனில் வீடியோ எடுக்கத் தடை
மும்பை பூங்காவில் காதல் ஜோடி மீது கொடூர தாக்குதல்: பிடிபட்ட 8 சிறுவர்கள் சீர்திருத்தப் பள்​ளி​யில் அடைப்பு

X