புதுடெல்லி: ஜிஎஸ்டி அதிகாரிகளின் கைது அதிகாரம் ரத்து செய்யப்படுவதற்கு, டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
57-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கர்நாடகா, ஹரியானா, கோவா, ஜம்மு காஷ்மீர், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களின் முதல்வர்கள், நிதி அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், “ஜிஎஸ்டி அதிகாரிகளின் கைது அதிகாரம் ரத்து செய்யப்படவும், வழக்கு தொடங்குவதற்கான வரம்பு ரூ.1 கோடியில் இருந்து ரூ.5 கோடியாக உயர்த்தவும் ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
குறைந்தபட்ச தண்டனை முறை நீக்கப்பட்டு, அபராதம் அல்லது சிறைத் தண்டனை அல்லது இரண்டும் என தண்டனையை தீர்மானிக்கும் அதிகாரம் நீதித்துறை முடிவுக்கு விடப்படுகிறது.
வருமான வரித் தாக்கல் தாமதமாக செய்தாலோ, தவறு செய்தாலோ வரி செலுத்துவோருக்கு அபராதம் மட்டுமே விதிக்கப்படும். அதற்கு மேற்பட்ட நடவடிக்கைகள் இருக்காது. பொது அபராதத் தொகை ரூ.25,000-ல் இருந்து ரூ.10,000 ஆக குறைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இன்றைய நிகழ்ச்சி நிரலில் உள்ள அனைத்து அம்சங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சீர்திருத்தம் தொடர்பான இன்றைய நிகழ்ச்சி நிரலின் அனைத்து அம்சங்களும் 2027, ஏப்ரல் 1 முதல் நடைமுறைப்படுத்தப்படும்” என தெரிவித்தார்.