

கோட்டயம்: கேரளாவைச் சேர்ந்த 78 வயது ஓய்வுபெற்ற செவிலியர் அன்னம்மா ட்ரூப் வயலுங்கர், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, கோட்டயம் மாவட்டத்தில் உள்ள தனது பண்ணை வீட்டு நீச்சல் குளத்தில் தினமும் 30 நிமிடங்கள் அவர் மேற்கொள்ளும் ‘அக்வா யோகா' (தண்ணீரில் செய்யும் யோகா) விபரங்கள் வெளியாகி வைரலாகி உள்ளது.
1948-ம் ஆண்டு பிறந்த அன்னம்மா, ஐரோப்பாவில் நர்சிங் படிப்பை முடித்து, ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து நாட்டு அரசு மருத்துவமனைகளில் தலைமைச் செவிலியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சுவிட்சர்லாந்தில் பணியாற்றியபோது சக செவிலியர் ஒருவர் மூலமாகவே இவருக்கு இந்த ‘ஜல யோகா' (அக்வா யோகா) அறிமுகமானது.
இதுகுறித்து அன்னம்மா கூறுகையில், ‘‘தண்ணீரில் யோகா செய்யும்போது, நீரின் எதிர்ப்புத் திறன் தசைகளை வலுவாக்குவதோடு இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. இது நுரையீரல் ஆரோக்கியத்திற்கு மிகச் சிறந்தது. கொரோனா பேரிடர் காலத்தில்தான் நுரையீரலின் முக்கியத்துவத்தை உலகம் உணர்ந்தது. நுரையீரல் ஆரோக்கியமாக இருந்தால் பல நோய்களை எளிதில் வெல்லலாம்’’ என்கிறார்.